Published : 04 Aug 2022 01:48 PM
Last Updated : 04 Aug 2022 01:48 PM
சென்னை: சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
மத்திய கல்வித் துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்ற கருத்தரங்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் சிறப்பான இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் துணை வேந்தர்களை ஆளுநர் கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, "தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை. தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர கல்வி நிறுவனங்களும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் .
கல்வித் தரத்தை இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டும். சிறந்த கல்லூரிகள் தங்களது யுக்திகள், முன்னெடுப்புகள், அனுபவங்களை இதர கல்லூரிகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். கல்லூரிகள் தங்களை சுயமதிப்பீடு செய்துக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "இந்தியாவிலேயே உயர்கல்வித் தரத்திலும், சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. உயர்கல்விக்காக முதலமைச்சர் அதிக நிதியினை ஒதுக்கியுள்ளார். கல்வித் தரத்தை மேலும் உயர்த்த நான் முதல்வன், மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல திட்டங்களை அறிவித்துள்ளார். அனைவருக்கும் உயர்ந்த தரமான கல்வி சென்று சேர வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். தரவரிசையில் இடம்பெற்ற 11 கல்லூரிகளில் ஒன்று மட்டுமே அரசுக்கல்லூரி என்பதில் சற்று வருத்தம் தான். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் போட்டி போட்டு உயர வேண்டும்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் உருவாக்கும் மாநிலம் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. கலை, அறிவியல், மருத்துவம் என்ற எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT