Published : 04 Aug 2022 12:48 PM
Last Updated : 04 Aug 2022 12:48 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் கூடியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் நடப்பு நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்பட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. மருந்து உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் நிறுவனங்கள் நல்ல வருவாய் ஈட்டியுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வணிக வரித் துறையிடம் உள்ள தரவுகளின்படி, கடந்த 2021-22 ஆம் ஆண்டில், மொத்தம் ரூ.1,823.17 கோடி ஜிஎஸ்டி வசூல் இருந்தது, இதில் எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகியவை அடங்கும். அதேபோல் 2020-21ல் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,645.66 கோடியும், 2019-20ல் ரூ.1,869 கோடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தற்போதைய போக்கின்படி, யூனியன் பிரதேசத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2019-20 இல் எட்டப்பட்ட புள்ளிவிவரங்களைத் தாண்டியிருக்கலாம்" என்று வரிப் பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக சிஜிஎஸ்டி அலுவலக உயர் அதிகாரி கூறுகையில், "மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) மூலம் வரும் வருவாய் நடப்பு நிதியாண்டில் ஜூலை 2022 வரை ரூ. 243 கோடியாக உயர்ந்துள்ளது, 2021 ஜூலை வரை வசூலான ரூ.164 கோடியுடன் ஒப்பிடுகையில், சிஜிஎஸ்டி வசூல் 48% அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) வசூல் இந்த நிதியாண்டின் ஜூலை மாதம் வரை ரூ. 398 கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.247 கோடியாக இருந்தது. வசூல் அதிகரிப்பு 61.1%. கடந்த நான்கு மாதங்களில் ஜிஎஸ்டி வசூல், தேசிய அதிகரிப்பை விட புதுச்சேரியில் அதிகமாக உள்ளது. 15,030 வரி செலுத்துவோர் எஸ்ஜிஎஸ்டி துறையின் கீழ் இருந்த நிலையில், சுமார் 8,000 தொழில்முனைவோர் சிஜிஎஸ்டியின் கீழ் வருகிறார்கள்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
யூனியன் பிரதேசத்திற்கான ஜிஎஸ்டி தரவுகள் குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி-இந்திய தொழில் கூட்டமைப்பு பிரிவின் உறுப்பினர், “நிச்சயமாக, கடந்த சில மாதங்களில் பொருளாதார செயல்பாடு மேம்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, ஆட்டோ-மொபைல் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எஃகு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் நல்ல வருவாய் ஈட்டியுள்ளன." என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT