Published : 17 Oct 2016 09:30 AM
Last Updated : 17 Oct 2016 09:30 AM
சென்னையின் குடிநீர் தேவைக்காக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கிடையே போடப்பட்ட தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுகிறது. கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறி கிருஷ்ணா நீரை திறக்கவில்லை.
ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை எனக் கூறி நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விட வேண்டிய கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்துவிடாமல் இருந்தது. அதே நேரத்தில், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஆந்திராவில் உள்ள சைலம், சோம சீலா அணை மற்றும் கண்டலேறு அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. இதையடுத்து, தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளின் கோரிக்கைப்படி, கடந்த 10-ம் தேதி மாலை கண்டலேறு அணையை ஆந்திர அரசு திறந்தது.
தொடக்கத்தில் விநாடிக்கு 200 கனஅடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், கடந்த 14-ம் தேதி முதல் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கண்டலேறு அணையில் இருந்து 152 கி.மீ. தொலைவில் உள்ள தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு, கடந்த 14-ம் தேதி கிருஷ்ணா நதி நீர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மெதுவாக வரும் நீர்
எனினும், கிருஷ்ணா கால்வாய் வறண்டு காணப்படுவதால் நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து 112 வது கி.மீ. தூரம் வரை தான் கிருஷ்ணா நீர் வந்துள்ளது. இன்று மாலை அல்லது இரவுக்குள் ஜீரோ பாயிண்டை வந்து சேரும் கிருஷ்ணா நீர், நாளை அல்லது நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு வரும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையடுத்து, தமிழகப் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயின் சீரமைப்புப் பணி களை பொதுப்பணித்துறை அதிகாரி கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜீரோ பாயிண்ட் முதல் பூண்டி வரையான 25.275 கி.மீ. பகுதியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சீரமைப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜீரோ பாயிண்ட் முதல் பூண்டி வரை உள்ள கால்வாயில் ஆங்காங்கே உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு மிகவும் சேதமடைந்த கரைகள் தற்காலிகமாக சீரமைக் கப்படுகின்றன. கால்வாயில் சரிந்து விழுந்துள்ள மண் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி இன்று மாலைக்குள் முடிவுறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண் இலகு தன்மை கொண்ட தால் சிறு மழைக்கு கூட தாங்கா மல் கரை சரிந்து விழுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனு மதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT