Published : 03 Aug 2022 11:27 PM
Last Updated : 03 Aug 2022 11:27 PM
மதுரை: தமிழகத்தில் 19 மருத்துவக்கல்லூரிகளுக்கான எம்பிபிஎம் பாடத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்பப்பயிற்சிகள் வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் மண்டல மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னையில் மட்டுமே இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக்கல்வி தொழில்நுட்பப் பயிற்சிக்கான மண்டல மையமாக மதுரை மருத்துவக்கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது.
மருத்துவக்கல்வி தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக புதுக்கோட்டை, நாமக்கல், தேனி, கரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், கோவை ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவுமனைகள், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை எச்எம்சிஎச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோவை பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 19 மருத்துவக்கல்லூரிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவக்கல்வி தொழில்நுட்பத்திற்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் மண்டல மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி தலைவர் டாக்டர் அருணா வி.வினிக்கார் மையத்தை இன்று தொடங்கி வைத்தார். இளங்காலை மருத்துவக் கல்வி நிரந்தர உறுப்பினர் டாக்டர் விஜயேந்திர குமார், சென்னை மருத்துவக்கல்வி இயக்குனர் ஆர்.நாராயணபாபு, டீன் ரத்தினவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டீன் ரத்தினவேலு கூறுகையில், "மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் 19 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு திருத்தப்பட்ட அடிப்படை பாடங்கள் பற்றி பயிற்சி வழங்குவார்கள். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து பாடத்திட்ட அடிப்படையிலான கல்வி, அணுகும் நெறிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு புதிதாக குடும்ப தத்தெடுப்பு திட்டம் பாடத்திட்டம் எடுக்கப்படுகிறது.
இந்த பாடத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இதுபோன்ற பாடத்திட்டங்கள் மருத்துவக்கல்வியின் தரத்தினையும் மேம்படுத்துவதற்கும், மருத்துவ மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக்கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையம் முக்கியமானதாக கருதப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT