Published : 03 Aug 2022 10:56 PM
Last Updated : 03 Aug 2022 10:56 PM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்த சாலைகளை புதிதாக போடவோ, சீரமைக்கவோ செய்யாததால் அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் மண்ணுக்குள் புதையும் அவலம் நிகழ்ந்து வருகிறது. அதனால், புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையும் சேதமடைந்து மாநகராட்சிக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் புறநகர் வார்டுகளில் ரூ. 274 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் வார்டுகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் சாலைகளை நடுவில் குழி தோண்டி குழாய்கள், பாதாளசாக்கடை தொட்டிகள் அமைத்து வருகின்றனர்.
இந்தப் பணிகளை முடித்தவுடன் சேதப்படுத்திய சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல், தோண்டிய குழிகளில் மண்ணை மட்டும் போட்டு மூடிவிட்டுச் செல்கின்றனர். அதனால், பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடப்பதற்கு முன்பு இருந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக, சேறும் சகதியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளன.
சில தார் சாலைகள் நடுவில் தோண்டிய குழியில் மட்டும் மண் கீழே இறங்கியுள்ளது. பாதாளச் சாக்கடைப் பணியால் புறநகர் வார்டுகளில் உள்ள அனைத்து சாலைகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை புதிதாக போட்டால் மட்டுமே மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய சாலைகளை போடுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மானிய நிதி உதவிகள் வரவில்லை.
மாநகராட்சியில் தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டு வசூல் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. வரிவசூலில் கிடைக்கும் நிதியில் மாநகராட்சி ஊழியர்கள் ஊதியம், குடிநீர், சுகாதாரம் அடிப்படைப் பணிகளைத்தான் மாநகராட்சியால் மேற்கொள்ள முடியும். சிறப்பு நிதி வந்தால் மட்டுமே பாதாளசாக்கடை திட்டத்திற்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளை சீரமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் தற்போது மாலை நேரங்களில் கன மழை பெய்கிறது. இந்த மழைக்கு பாதாளச் சாக்கடைக்காக தோண்டிய சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளில் சரக்கு வாகனங்கள் சென்றால் அவை மண்ணில் புதைந்து புதிதாக போட்ட பாதாளசாக்கடையும் சேதமடைந்துள்ளன. அதனால், மீண்டும் அப்பணிகளை சரிபார்க்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று (ஆக.3) காலை 8-வது வார்டில் சமீபத்தில் பாதாள சாக்கடைப்பணிகள் நடந்த திருப்பாலை பஸ்நிறுத்தம் அருகே பாரத் நகர் கம்பர் தெருவில் சென்ற சரக்கு லாரி திடீரென்று மண்ணுக்குள் இறங்கியது. வாகனத்தை டிரைவரால் எடுக்க முடியவில்லை. மண்ணுக்குள் வாகனம் அமுங்கியதில் புதிதாக போட்ட பாதாளசாக்கடையும் சேதமடைந்துள்ளது. தற்போது புதிய சாலையுடன் பாதாளசாக்கடையும் மீண்டும் சீரமைக்கப்பட வேண்டும் என்பதால் மாநகராட்சிக்கு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ராஜதுரைவேல் பாண்டியன் கூறுகையில், "மாநகராட்சியில் நடக்கும் எந்த ஒரு பணியும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடப்பதில்லை. அதனால், பாதாளச் சாக்கடைப் பணியின் தரமும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அதிகாரிகளுக்கு தெரியவே இல்லை.
பாதாளச் சாக்கடை போட்ட சாலைகளில் இரு சரக்க வாகனங்கள், கார்கள் கூட போக முடியவில்லை. புதிய சாலைகள் போடாத நிலையில் மழைக்கு தற்போது சாலை சற்று கீழிறங்கிய நிலையில் காணப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. மழை பெய்தாலே வாகனங்களை எடுக்க முடியவில்லை. நடந்துதான் வெளியே செல்லும் அவலம் உள்ளது. மாநகராட்சியிடம் பலமுறை சொல்லியும் புதிய சாலைகள் போட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மோசமானை சாலையில் 25 டன் எடை கொண்ட லாரி வந்ததால் அது மண்ணுக்குள் புதைந்தது. பாதாளசாக்கடையும் சேதமடைந்தது." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT