Published : 03 Aug 2022 07:38 PM
Last Updated : 03 Aug 2022 07:38 PM
தேனி: தேனி மாவட்டத்திற்கான முதல் மேம்பால கட்டுமானப் பணி இன்று தொடங்கியது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏராளமான மேம்பாலங்கள் அமைந்த நிலையில் தேனிக்கு தாமதமாக கிடைத்துள்ள இந்த புதிய வசதி வளர்ச்சியின் பின்தங்கிய நிலையையே காட்டுகிறது.
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. கொச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான நெடுஞ்சாலைகள் தேனியைக் கடந்தே செல்கின்றன. இருப்பினும் புறவழிச்சாலை வசதி இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களும் ஒரே சாலையிலே சென்று வருகின்றன.
மாவட்டத்தில் எந்த ஊரிலும் மேம்பாலம் இல்லாததால் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தேனி-மதுரை சாலை ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மேரிமாதா பள்ளி முன்பு இருந்து திட்டச்சாலை வரை 1.7 கிமீ. தூரத்திற்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இருபுறமும் 38 தூண்கள் அமைகிறது.
தற்போது வலதுபுறம் மட்டுமே பணி நடைபெறுவதால் இடதுபுற சாலையை எதிரெதிரே வரும் வாகனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “பாலத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். இடையில் உள்ள ரயில்வேகேட் பகுதியில் சப்வே அமைக்கப்படுவதால் அனைத்து வாகனங்களும் தடையின்றி தொடர்ந்து செல்ல முடியும். மேம்பாலப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.
இதன் மூலம் வெளியூர் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழித்தடம் ஏற்பட உள்ளதால் தேனி நெரிசல் வெகுவாய் குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் கேஎஸ்கே.நடேசன் கூறுகையில், “ஏற்கெனவே நெரிசல் இருந்த நிலையில் தற்போது ரயில் போக்குவரத்தும் தொடங்கியதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த மேம்பாலத்தின் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும். பாலத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் சர்வீஸ் ரோட்டில் உள்ள வர்த்தகம் பாதிக்காது” என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், ”தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சுழல்பாதை மேம்பாலங்கள், இரண்டடுக்கு மேம்பாலங்கள் என்று உள்கட்டமைப்பின் அடுத்தடுத்த நிலைக்குச் சென்ற நிலையில் தேனி மாவட்டத்திற்கான முதல் பாலம் என்பது பின்னடைவான வளர்ச்சியையே காட்டுகிறது. பெரியகுளம், கம்பம் சாலையை ஒருங்கிணைந்து அமைய உள்ள மேம்பாலப் பணிகள் ஆய்வு முடிந்தும் பல மாதங்களாக கிடப்பிலே கிடக்கிறது. எனவே அப்பணியையும் துரிதப்படுத்த வேண்டும்” என்றனர்.
மக்களிடையே ஆர்வம்: கடந்த மே மாத இறுதியில் தேனி மாவட்டத்திற்கான முதல் ரயில் இயக்கம் தொடங்கியது. 12ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய ரயிலை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதே போல் மாவட்டத்தின் முதல் மேம்பாலப்பணியும் மாவட்ட மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT