Published : 03 Aug 2022 06:12 PM
Last Updated : 03 Aug 2022 06:12 PM

“என்னை எதிர்த்து பேசும் நீங்கள் பாஜகவை எதிர்ப்பீர்களா?” - ஜெயக்குமாருக்கு சீமான் கேள்வி

சென்னை: "அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பேசுவதற்கு ஆள் இல்லை. ஸ்டாலின், பாஜகவை பேசினால், நேராக அவரது வீட்டிற்கு சோதனைக்கு ஆட்கள் வருவார்கள். அதனால் என்னை பேசியுள்ளார்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீமானுக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம் என்று கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு வாய்க்கொழுப்பு, அவர்களுக்கு பணக்கொழுப்பு. எந்த கொழுப்பு தேவைப்படுகிறது இப்போது? ஜெயக்குமார் மீது மரியாதை வைத்துள்ளேன். அதனை காப்பாற்றிக் கொண்டு அமைதியாக போகவேண்டும். என்னிடம் மோதக்கூடாது. இழக்க எதுவும் இல்லாதவனிடம் வார்த்தையைக் கொடுக்காதே, சவால் விடாதே என்கிறார் ஹிட்லர். இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.

கோடி கோடியாக கொள்ளையடித்து பணம் வைத்துள்ளீர்கள். என்னை எதிர்த்து பேசும் நீங்கள் பாஜகவை எதிர்ப்பீர்களா? காலையில் ரெய்டு வந்துவிடுவார்கள். தேவையில்லாத சேட்டையெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. ஜெயக்குமாருக்கு பேசுவதற்கு ஆள் இல்லை. ஸ்டாலின், பாஜகவை பேசினால், நேராக அவரது வீட்டிற்கு சோதனைக்கு ஆட்கள் வருவார்கள். அதனால் என்னை பேசியுள்ளார். நான் அண்ணன் என்பதால் மதிக்கிறேன், பேசிவிட்டு போகட்டும்.

2024 தேர்தலில் பார்ப்போம். அதிமுக தனித்து நிற்குமா, நான் நிற்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் வாக்களர்களுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பார்களா? நீங்கள் சரியான ஆளாக இருந்தால், என்னை மோதி வந்துகாட்டுங்கள். திமுக, அதிமுக, பாஜக யாரும் தனித்து நிற்கமாட்டார்கள். நான் நிற்பேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x