Published : 03 Aug 2022 03:49 PM
Last Updated : 03 Aug 2022 03:49 PM

‘தண்டோரா’ போட கடுமையான தடை... மீறினால் நடவடிக்கை... - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

கோப்புப் படம்

சென்னை: "தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: "மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் 'தண்டோரா' போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் 'தண்டோரா' போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, 'தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் அரசு தரப்பு நடவடிக்கைகள் மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுகதிளில் பெய்த கனமழையின் காரணமாக கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும்போது, தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டன.

தண்டோரா போடுவதை நாகரிக காலத்திலும் தொடரும் அவலம் என்று தலைப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஒருசிலர் இதுபோன்ற பணிகளுக்கு ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x