Published : 03 Aug 2022 01:09 PM
Last Updated : 03 Aug 2022 01:09 PM
புதுடெல்லி: "5ஜி அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மத்திய அரசுதான் கூறியது. ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. இந்த வித்தியாசம் குறித்து யார் சொல்வது? எங்கு தவறு நடந்துள்ளது?" என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் திமுக எம்.பி. ஆ.ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தோரயமாக மெகாஹெர்ட்ஸுக்கும், கிகாஹெர்ட்ஸுக்கும் 10 முதல் 20 மடங்கு வித்தியாசம் இருக்கும். 2ஜி-யில் வெறும் குரல்தான் செல்லும், 3ஜி-யில் வீடியோ வந்தது, 4ஜி-யில் இன்னும் எஃபிஷியன்ஸி கூடுதலாக இருந்தது, 5ஜி-யில் 4ஜியை விட எஃபிஷியன்ஸி இன்னும் கூடுதலாக இருக்கும். அதாவது, உங்களது மொபைலில் இணையத்தில் ஏதாவது ஒரு பொருள் குறித்து தேடினால், 10 விநாடிகளில் வருவது 3ஜி, 5 விநாடிகளில் வருவது 4ஜி, 5ஜியில் ஒரு விநாடியில் வந்துவிடும்.
அந்தத் திறன் அடிப்படையில் பார்த்தால், இந்த ஏலம் ஒரு 5 லட்சம் கோடி, 6 லட்சம் கோடி அளவுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், 5ஜி அலைக்கற்றை ஏலம் முறையாக நடத்தப்படவில்லை. திட்டமிடுதல் மோசமா அல்லது நான்கு, ஐந்து நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டுச்சதி செய்துவிட்டதா என்பது குறித்து பின்னர் விசாரிக்க வேண்டும்.
5ஜி அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மத்திய அரசுதான் கூறியது. ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. இந்த வித்தியாசம் குறித்து யார் சொல்வது? எங்கு தவறு நடந்துள்ளது?.
2ஜி அலைக்கற்றை ஏலத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி விவகாரம் பெரிய மோசடி. அன்றைக்கு ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக அன்று வினோத்ராய் என்ற தனிமனிதரை பயன்படுத்தி, அவர் வசமிருந்து சிஏஜி என்ற அரசியல் சட்ட அமைப்பை பயன்படுத்தி அவருக்கு பின்னால் இருந்தவர்கள் 2ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக மிகப்பெரிய சதிவலையை தீட்டினார்கள். இதுகுறித்து என்னுடைய புத்தகத்திலும் எழுதியுள்ளேன். ஆனால், இதுவரை வினோத்ராயிடம் இருந்து எந்த பதிலும் இல்லை” என்றார்.
முன்னதாக, அரசு ஏலம் விட்டுள்ள 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 51.236 மெகாஹெர்ட்ஸ் (மொத்தத்தில் 71%) ரூ. 1,50,173 கோடிக்கு விற்பனையானது. இதில் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. வோடபோன் ஐடியா லிமிடெட் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. இதன்மூலமாக அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத்தொகை ரூ.13,365 கோடியாகும்.
தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் சூழலில், 5ஜி சேவைக்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இதற்காக 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. இதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி ஆகும். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT