Published : 03 Aug 2022 12:58 PM
Last Updated : 03 Aug 2022 12:58 PM

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: அவசரக் கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண்கள் அறிவிப்பு

இடம்: சென்னை | படம்: ஆர்.ரகு

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறுகையில், "தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 2.8.2022 முடிய தமிழ்நாட்டில் 242.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 94 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 32 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 5.48 மி.மீ. ஆகும்.

இதன்படி தருமபுரியில் 33.60 மி.மீ, வேலூரில் 11.97 மி.மீ, கிருஷ்ணகிரியில் 23.28 மி.மீ, திருவள்ளூரில் 10.93 மி.மீ, கோயம்புத்தூரில் 21.23 மி.மீ, தேனியில் 8.33 மி.மீ, கன்னியாகுமரியில், 16.64 மி.மீ, ஈரோட்டில் 6.85 மி.மீ, திருப்பத்தூர் 13.26 மி.மீ, சேலம் 6.64 மி.மீ, இராணிப்பேட்டை 13.19 மி.மீ, அரியலூர் 5.96 மி.மீ, திருவண்ணாமலை 12.31 மி.மீ, பெரம்பலூர் 5.82 மி.மீ ஆகிய இடங்களில் அதிக கன மழை பதிவாகி உள்ளது. கன மழையை பொறுத்த வரையில் திருத்தணியில் 113.0 மி.மீ, சின்னக்கல்லாரில் 85 மி.மீ, பாலக்கோடு 75 மி.மீ, மாரண்டஹல்லியில் 72 மி.மீ பதிவாகி உள்ளது.

இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (4ம் தேதி ) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

5ம் தேதி அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனைத் தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6ம் தேதி வரை, குமரிமுனை, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x