Published : 03 Aug 2022 04:15 AM
Last Updated : 03 Aug 2022 04:15 AM
‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ சிறப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
பதினெட்டு வயதுக்கு குறைவான இளம் பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை. இதை தவிர்க்க, கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: சிறார்களுக்கான பாதுகாப்பை மையப்படுத்தி ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறான தொடுதல், பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அது தொடர்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூகவலைதளங்களை கையாளுவது உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.
10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் எவை? அதனால் ஏற்படும் உடல், மன ரீதியிலான மாற்றங்கள், எதிர்கால பாதிப்புகள், சமூகவலைதளங்களைக் கையாளுதல் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் நல அலுவலர், குழந்தை நல அலுவலர் என இரண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 56 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 156 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போக்ஸோ வழக்கில் கைதானாலும் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்ட விழிப்புணர்வு மூலம் வளர்ப்பு தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி, நண்பரால் பாதிக்கப்பட்டசிறுமி என இரண்டு பேர் தைரியமாக வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு துன்புறுத்தல் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT