Published : 04 Oct 2016 12:52 PM
Last Updated : 04 Oct 2016 12:52 PM
கோவை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் தீவிரப் பிரச்சாரத்தை வேட்பாளர்கள் தொடங்க உள்ளனர். அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கும் மக்களின் கேள்விகளையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.
1981-ல் உருவான கோவை மாநகராட்சி, ஏறத்தாழ 105 சதுர கிமீ பரப்பு கொண்டது. கோவை வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய மண்டலம் என 5 மண்டலங்கள், 100 வார்டுகள் கொண்ட இம்மாநகராட்சியில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தொடக்கத்தில் 72 வார்டுகள் இருந்த நிலையில், பின்னர் கவுண்டம்பாளையம் நகராட்சி, சரவணம்பட்டி, வடவள்ளி, குனியமுத்தூர், குறிச்சி, விளாங்குறிச்சி, துடியலூர், காளப்பட்டி பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக மாறியது. ஆனால், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே?
பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், பீளமேடு, செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அவ்வழியே நடந்து செல்வோர்கூட மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை, நீண்டநாள் கனவாகவே உள்ளது.
சுகாதாரச் சீர்கேடு
இதேபோல, நகரை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினை சுகாதாரம். பல பகுதிகளில் சரிவர குப்பை அள்ளப்படாததால், சாலையோரங்களில் குப்பை கொட்டிக்கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் தூர் வாரப்படாததாலும், கழிவு, குப்பைகளால் சாக்கடை அடைத்துக்கொண்டிருப்பதாலும் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.
இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் கொசுக்கள் அதிகரித்து, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவக் காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
குண்டும், குழியுமான சாலைகள்
இதுமட்டுமின்றி, பல பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி, விபத்துகளும் நேரிடுகின்றன.
5 மண்டலங்களிலும் தரம்வாய்ந்த மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை.
மேலும், சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளும் முற்றுப்பெறவில்லை.
பல பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாலும், சிறுவாணி நீருடன் உப்புநீர் கலந்து வருவதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், வாக்குகேட்டு வரும் வேட்பாளர்களை கேள்விக்கணைகளால் துளைத் தெடுக்க காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து 75-வது வார்டு திமுக வேட்பாளர் ரஹமத்துன்னிசா கூறும்போது, “எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், அவர்களைச் சந்தித்து, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முயற்சிப்பதாக உறுதியளிப்பேன்” என்றார்.
மாநகராட்சி 28-வது வார்டில் போட்டியிடும் பாரத மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.வினோத் கூறும்போது, “சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள், பொதுநூலகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். நான் வெற்றி பெற்றால், இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
72-வது வார்டு திமுக வேட்பாளர் வி.சுமா விஜயகுமார் கூறும்போது, “குப்பை அள்ளாததாலும், சாக்கடைகள் அடைத்துக் கொள்வதாலும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
சாக்கடை வசதி இல்லாததால், மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து, சாலையில் வழிந்தோடுகிறது. கொசுக்கடியால் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். நான் வெற்றி பெற்றால் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.
உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது வார்டில் உள்ள ஒவ்வொருவரையும் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்த சவாலை எதிர்கொண்டு, மக்களின் நம்பிக்கையைப் பெறுபவரே, மாநகராட்சித் தேர்தலில் வெற்று பெறுவார் என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT