Last Updated : 02 Aug, 2022 09:01 PM

6  

Published : 02 Aug 2022 09:01 PM
Last Updated : 02 Aug 2022 09:01 PM

சிவகாசியில் ஆக.6-ல் பாஜக பாதயாத்திரை நடத்த நிபந்தனையுடன் உயர் நீதிமன்றம் அனுமதி 

மதுரை: சிவகாசியில் ஆகஸ்ட் 6-ம் தேதி பாஜக பாதயாத்திரைக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு ஜவுளி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜவுளி பூங்காவுக்கு இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து ஜவுளி பூங்கா அமைக்க தேவையான இடத்தை ஒதுக்க தமிழக அரசை வலியுறுத்தி திருத்தங்கல் முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாஜகவினர் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர்.

இதையடுத்து பாஜக சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவில் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரித்தனர்.

அரசு தரப்பில் சிவகாசியிலிருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 27 கிலோ மீட்டர் தூரம் குறுகிய பாதையாகும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இப்பாதையில் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் உள்ளன. பாத யாத்திரை நடத்தினால் நெரிசல் அதிகரித்து அவசர வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் பாதயாத்திரை நடத்த அனுமதிக்கலாம். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசியில் பாஜகவினர் 500 பேர் ஆர்பபாட்டம் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

பாஜக வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிடுகையில், இந்தச் சாலையில் பல பாதயாத்திரைகள் நடத்தப்பட்டுள்ளது. பாஜக பாத யாத்திரையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது. பாத யாத்திரை நடத்த தனி நீதிபதி 2 முறை அனுமதி வழங்கினார். அதன் பிறகும் போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆகஸ்ட் 6-ல் காலை 10 மணி முதல் 1 மணி வரை பாஜக சார்பில் பாதயாத்திரை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சிவகாசி முதல் 2 கிலோ மீட்டர் தூரம் 300 நபர்கள் பாதயாத்திரை செல்லலாம். பின்னர் வாகனத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். ஆட்சியர் அலுவலகத்துக்குள் 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x