Published : 02 Aug 2022 07:14 PM
Last Updated : 02 Aug 2022 07:14 PM

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் 3 லட்சம் வேலைவாய்ப்புகள்: பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை

மதுரை: ‘‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது” என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மதுரையில் மையத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புதுத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார புத்தாக்க மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வணிகவரி மற்றும் பாத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில் மழை நீரை விரைவாக உறிஞ்சி எடுக்க சூப்பர் சக்கர் லாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு மேலும் சூப்பர் சக்கர் லாரிகள் வாங்கப்படும். பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது.

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் புதிய யுக்தியுடன் 2 லட்சம் ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை நவீனப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பலநூறு நிறுவனங்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பை பெறவும் இத்திட்டம் அடித்தளமாக இருக்கும், ’’ என்றார்.

ஆர்பி.உதயகுமார் ஊழலை பற்றி பேச நேரம் போதாது: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மேலும் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யவில்லை என பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என ஆர்பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளதாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதிற்கு, ‘‘ஆர்பி.உதயகுமாருக்கெல்லாம் பதில் சொல்கிற ஆளு நான் இல்லை. ஸமார்ட் சிட்டி முறைகேடுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் உருவாக்கி இருக்கிறோம். ஆர்பி.உதயகுமார் செய்த ஊழல்களை பேச ஆரம்பித்தால் நேரம் போதாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x