Published : 02 Aug 2022 05:02 PM
Last Updated : 02 Aug 2022 05:02 PM

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணித் திட்டத்தின் நிலை என்ன? - ஒரு பார்வை

மதுரை: மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணித் திட்டமும், சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்ட அமைச்சர்கள், எம்பி-கள் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்நாட்டு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக செயல்படுகிறது. உள்நாட்டு பயணிகள் வருகையில் திருச்சியை விட மதுரை விமான நிலையத்தில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் அதிகம். மதுரையை விட மிக மிகக் குறைவாக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் திருப்பதி, மங்களூர், வாரணாசி, ஷீரடி விமான நிலையங்கள் கூட சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரை விமான நிலையம் இதுவரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவில்லை.

மதுரை விமான நிலையம் தற்போது வரை "கஸ்டம்ஸ்" விமான நிலையமாக மட்டுமே செயல்படுவதால் வெளிநாடுகளில் இருந்து அந்த நாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக மதுரைக்கு விமானங்களை இயக்க முடியவில்லை. திருப்பதி, ஷீரடி, வாரணாசி போன்ற நகரங்களை போல் உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலை கொண்டுள்ள மதுரையும் இந்தியாவின் முக்கிய ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாகவும் திகழ்கிறது. அதன் அடிப்படையில் மதுரையில் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கலாம் என்றும் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்படுகிறது.

அதுபோல், மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.201 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 116 நிதி ஒதுக்கி கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை விமான நிலையம் ஓடுதள விரிவாக்கம், மதுரை - தூத்துக்குடி 4 வழிச் சாலையின் மேல்புறம் ஓடுதளம், ஓடு தளத்தின் கீழ் வாக னங்கள் செல்லும் வகையில் அண்டர் பாஸ் பாலம், புதிய சரக்கு முனையம், பயணிகள் வசதிக்காக மேலும் 2 முனையங்கள் போன்ற பணிகள் கிடப்பில் உள்ளது.

மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது தென் மாவட்ட மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. தென் மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும என்று எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜேகதீசன் கூறும்போது, "தமிழக அரசிடம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த திட்டப்பணிகளை பற்றி விமான நிலையம் அதிகாரிகள் எப்போது தொடங்கும், முடிக்கப் போகிறோம் என்று சொல்வதில்லை.

மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையின் மேல்புறம் ஓடுதளம், ஓடு தளத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் வகையில் அண்டர் பாஸ் பாலம் முடிந்தால் மட்டுமே விமான நிலையத்தில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.

தற்போது ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், துபாய்க்கு மட்டுமே மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா மட்டுமே பிஏஎஸ்ஏ எனப்படும் இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளையும் அந்த ஒப்பந்த்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், இதுவரை இணைக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x