Published : 02 Aug 2022 03:18 PM
Last Updated : 02 Aug 2022 03:18 PM
சென்னை: "கடந்த ஜூன் 1 முதல் ஆக.2 வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான தென்மேற்கு பருவ மழையின் அளவு 242 மி.மீ. இந்தக் காலத்தின் இயல்பான அளவு 125 மி.மீ. இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியப் பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற ஷேர் ஜோன் (Share Zone) பகுதி நிலவுகிறது. இந்தப் பகுதி அடுத்துவரக் கூடிய நாட்களில் வடக்கு நோக்கி நகரக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 10 இடங்களில் கன மழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 4-ல் கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் 1 முதல் இன்று (ஆக.2) வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 242 மி.மீ. இந்தக் காலத்தின் இயல்பான அளவு 125 மி.மீ. இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment