Published : 02 Aug 2022 09:45 AM
Last Updated : 02 Aug 2022 09:45 AM
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்று தொடங்கி வரும் 4-ம் தேதிவரை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, ‘எந்த ஒரு இடத்திலும் மழை நீர் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1070 அல்லது 0462 2501012 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ‘தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
‘ஆழமும், நீரோட்டமும் உள்ள நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். இடி, மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவசாயத் தொழிலாளர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின்போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம். மரங்களுக்கு கீழ் பாதுகாப்புக்காக ஒதுங்க வேண்டாம். பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரை பருகி நோயிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளுக்கு 04633 – 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 52 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம், சேர்வலாறு- தலா 1, மணிமுத்தாறு- 2.4, அம்பாசமுத்திரம்- 2, பாளையங்கோட்டை- 13, திருநெல்வேலி- 7.40.
பாபநாசம் அணைக்கு 544 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 804 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 66.85 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 78 கனஅடி தண்ணீர் வருகிறது. 155 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 73.20 அடியாக இருந்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. மதியம் 12 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் 12 மிமீ, குண்டாறு அணையில் 10, கருப்பாநதி அணையில் 4, அடவிநயினார் அணை, ஆய்க்குடியில் தலா 2 மிமீ, சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 66.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 47.90 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. நேற்று முன்தினம் மாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் தடை நீக்கப்பட்டு, அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.
நேற்று மதியத்துக்கு பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. குற்றாலம் மலைப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மாலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT