Published : 02 Aug 2022 09:20 AM
Last Updated : 02 Aug 2022 09:20 AM
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் விளைவிக்கப்படும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இரு மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி, சாலைக்கிராமம், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், முது குளத்தூர் உள்ளிட்ட 38 ஆயிரம் ஏக்கரிலும் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறிப் பிட்ட பகுதிகளிலும் விளைவிக்கப் படுகிறது.
இந்த மிளகாய், ‘ராமநாதபுரம் முண்டு’ என்று அழைக்கப்படுகிறது. மானாவாரியாகவும், இறவை முறையிலும் மிளகாய் சாகு படியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் மிளகாய் வத்தல் இளையான்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், பரமக்குடி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மிளகாயை சேமித்து வைத்து, மதிப்புக் கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சிவகங்கையில் மத்திய அரசு சார்பில் நறுமணப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து சாலைக்கிராமம் விவசாயி வில்லியம் கூறியதாவது: ருசி, காரத்தன்மை மிகுந்த குண்டு மிளகாய் நிறமும் அடர் சிவப்பாக இருக்கும். மருத்துவ குணமுடையது. குண்டு மிளகாய் எண்ணெய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி உண்டு. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கே உரித்தான குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண் டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT