Published : 02 Aug 2022 11:12 AM
Last Updated : 02 Aug 2022 11:12 AM
சென்னை: சென்னை தி.நகா் பிரகாசம் சாலையில் இருக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஃபைனான்சியர் மற்றும் திரையரங்கு உரியமையாளர் என பல தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் ஜி.என்.அன்புச்செழியன். இவரது கோபுரம் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று ரெய்டு நடைபெறுகிறது. அண்மையில் வெளியான தி லெஜன்ட் படத்தை அன்புச்செழியன் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான் இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது. மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அவரது திரையரங்குகள், அலுவலகங்கள், சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, சென்னையில் உள்ள அலுவலகங்கள் என்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை தியாகராயநகர் பிரகாசம் சாலையில் இருக்கும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.ஆர்.பிரபு - ஞானவேல்ராஜ் அலுவலகங்களிலும் சோதனை: திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராயநகர் தணிகாசலம் சாலையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் அலுவலகத்திலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 12-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT