Published : 02 Aug 2022 04:05 AM
Last Updated : 02 Aug 2022 04:05 AM
படிவம் 6பி-யை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை பொதுமக்கள்இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் மற்றும் வெவ்வேறு தொகுதிகளில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார்.
ஆட்சியர் பேசும்போது, ‘‘மாவட்டத்துக்கு உட்பட்ட 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கும் 6பி படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியோ அல்லது https://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது VOTER HELP LINE செயலி மூலமாகவோ சுயமாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும், தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையங்களை அணுகியும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை படிவம் 6பியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
கோவையைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மை செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
ஒரு வாரத்துக்குள் 6பி படிவம் விநியோகம்
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘6 பிபடிவம் தற்போது சேலம் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் கோவைக்கு வந்துவிடும். அதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக 6பி படிவம் பொதுமக்களுக்கு வாக்காளர் அட்டையின் அடிப்படையில் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து மக்கள் ஒப்படைக்கலாம். ஆன்லைன் வழியாகவும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு இணைத்துக் கொள்ளலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT