Published : 22 Jun 2014 06:08 PM
Last Updated : 22 Jun 2014 06:08 PM
திருச்சி மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் சைக்கிள்கள் செல்வதற்கு தனியாக மிதிவண்டிப் பாதை (சைக்கிள் டிராக்) அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் சைக்கிள் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய சாலைகளில் சைக்கிள்கள் செல்ல தனிப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, திட்ட அறிக்கையை மாநகராட்சியிடம் சமர்ப்பித்துள்ளார் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் ஆந்திராவைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் பி.கிரீஷ்குமார். ஆய்வு குறித்து பி.கிரீஷ்குமார் 'தி இந்து'விடம் கூறியது:
மோட்டார் வாகனங்களின் பயன்பாடுகளைக் குறைத்து சைக்கிள்கள் பயன்படுத்துவதை அதிகரித்தால், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும். மேலும், சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு வலுவூட்டும் என்பதால் சைக்கிள் சவாரியை பல நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன. இதற்கென சாலைகளில் நடைபாதை போன்று சைக்கிள்கள் செல்ல தனி பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் திருச்சியில் உள்ள சிம்கோ மீட்டர் சாலை, ராஜாராம் சாலை, காஜாமலை சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தேன். இந்த சாலைகளில் சராசரியாக 15 நிமிடங்களில் 72 சைக்கிள்கள் செல்கின்றன. பெரும்பாலும் வயதானவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தான் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைவு தான்.
தற்போதுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் செல்லவும் மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் சைக்கிள்களில் செல்வது சற்று ஆபத்தானது தான். சைக்கிள்கள் செல்ல தனி டிராக் அமைக்கும் பட்சத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் வரை யார் வேண்டுமானாலும் பாதுகாப்பாக சைக்கிளில் செல்லலாம். இது தொடர்பாக எனது பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார் வழிகாட்டுதலுடன் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளேன் என்றார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி கூறியது: இந்த ஆய்வு அறிக்கை மற்றும் அதனை செயல்படுத்துவது தொடர்பான கருத்துரு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் டிராக் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து திட்டமிடப்படும். சைக்கிள் டிராக் அமைத்தால், சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயரும் என்றார்.
பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க ரூ.679 கோடிக்கு கருத்துரு
மாநகரங்களில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சத்தின் முலம் விரைவுப் பேருந்து போக்குவரத்து அமைப்பு (Rapid Bus Transport System) செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் அமலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் - ஸ்ரீரங்கம் - விமான நிலையம் வரையிலான 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரைவுப் பேருந்து போக்குவரத்து அமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபாதைகள், மலைக்கோட்டை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை நடைபாதை, சைக்கிள் டிராக், சைக்கிள் ஸ்டேஷன், அரை கிலோ மீட்டருக்கு ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ.679 கோடிக்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.100 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT