Published : 01 Aug 2022 05:43 PM
Last Updated : 01 Aug 2022 05:43 PM
சென்னை: தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக தடயவியல் ஆய்வகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வனத்துறை, காவல் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுசம்பந்தமான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சிறப்பு புலனாய்வு குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "யானை தந்தங்கள் விற்பனை, யானை வேட்டை தொடர்பான 10 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணைக்காக தமிழக தடயவியல் ஆய்வகம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல கர்நாடகா மாநிலம் தொடர்புடைய சில வழக்குகள் உள்ளன. எனவே கர்நாடக அதிகாரிகளை நோடல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "நோடல் அதிகாரி நியமிப்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடகா மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளரை எதிர்மனுதாரராக்ச் சேர்த்தனர்.
மேலும், வனக்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை தமிழக தடயவியல் ஆய்வகம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT