Published : 01 Aug 2022 04:02 PM
Last Updated : 01 Aug 2022 04:02 PM
சென்னை: "வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் குளறுபடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு" என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது: "பொதுவாகவே வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்கக் கோரி அதிமுகவின் சார்பில், ஒவ்வொரு தொகுதியிலும் மனு அளித்தும்கூட, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்களிப்பார்கள். இதையெல்லாம் நீக்கி திருத்தப்பட்ட சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இந்தக் குளறுபடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்று அதிமுக சார்பில் கருத்து கூறியுள்ளோம். போலி வாக்காளர்கள் இருக்கவே கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தவிதமான தவறுகளும் இல்லாத வாக்காளர் பட்டியலை அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களே இன்னும் 5 சதவீதம் வரை நீக்கவில்லை. வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சார்பில், நானும் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்துகொண்டோம். மற்றவர்கள் பங்கேற்பது குறித்து எல்லாம் எங்களிடம் கேட்க வேண்டாம். கோவை செல்வராஜ் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று எனக்கு தெரியாது. எங்கள் கட்சியின் சார்பில் இரண்டு பேர்தான் கலந்துகொண்டோம்" என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT