Published : 01 Aug 2022 03:13 PM
Last Updated : 01 Aug 2022 03:13 PM
திருச்சி: திருச்சி ஜி கார்னர் பகுதியில் மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்பில்லை என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாநகரில் உள்ள ஜி கார்னர் பகுதி முக்கியமான பகுதியாகும். இந்த இடத்திலிருந்துதான் பொன்மலை ரயில்வே பணிமனை சாலை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாநகருக்குள் செல்லும் சாலை ஆகியவை பிரிகின்றன. இதில், பொன்மலை- டிவிஎஸ் டோல்கேட் இடையில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையில் எதிரெதிராக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருவழித்தடங்களையும் இணைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினர் பலமுறை ஆய்வுகளை மேற்கொண்டும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பில்லை என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி விபத்துகள்: இதுகுறித்து சமூக ஆர்வலரான ரயில்வே கே.முருகேசன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், அம்பிகாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், மாணவ, மாணவிகள், வாரச் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுரங்கப் பாதை இல்லாததால் இருவழிச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானநிலையம் மற்றும் திருச்சி மாநகருக்கு வரும் வாகனங்கள் இருவழிச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோதே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அப்போது ரயில்வே நிர்வாகம் போதிய இடம் வழங்கவில்லை எனக் கூறி அதை செய்யாமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாக தினந்தோறும் இந்த சாலையில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
அந்த கடிதத்துக்கு ஜூலை 26-ம் தேதியிட்ட கடிதம் ஒன்றை திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அலுவலகத்திலிருந்து அனுப்பியுள்ளனர். அதில், ஜி கார்னர் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் ஏமாற்றமளிக்கிறது" என்றார்.
தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்பில்லை: இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் (திருச்சி) பி.நரசிம்மன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம்,: "ஜி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சாலை, மற்றொரு சாலையைவிட ஏறத்தாழ 2.7 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இந்த இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்பு இல்லை. இதன் காரணமாகவே பொன்மலை- டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலை 8.75 மீட்டர் அகலத்தில் அப்போது அமைக்கப்பட்டது. இருப்பினும் வேறு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT