Published : 01 Aug 2022 02:28 PM
Last Updated : 01 Aug 2022 02:28 PM

கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம்: அனுமதி பெறும் பணிகள் தொடக்கம்

சென்னை: கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு, கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.

இதன்படி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை (EIA) மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x