Published : 01 Aug 2022 10:52 AM
Last Updated : 01 Aug 2022 10:52 AM

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் | அரசின் தயக்கம் ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: "ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது; ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று ஆளுநர் மூலமாக பிறப்பிக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றமளிக்கிறது.

மது, போதைப் பொருட்கள், பரிசுச்சீட்டு போன்ற தமிழ்நாட்டை பீடித்த பெருங்கேடுகளில் ஆன்லைன் சூதாட்டம் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தீமைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். அடுத்த அரை மணி நேரத்தில், புதிய தடை சட்டம் இயற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

ஆனால், அதன் பின் ஓராண்டு கடந்து விட்டது. இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப் படவில்லை. மாறாக, கடந்த ஓராண்டில் கொலைகள், தற்கொலைகள் என 27 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளன.

ஆன்லைன் சூதாட்டத்தால் 27 உயிர்கள் பலியானதற்கு, இந்த விஷயத்தில் தமிழக அரசு கடைபிடித்து வரும் தடுமாற்றமான நிலைப்பாடு தான் காரணம். ஆன்லைன் சூதாட்டம் பெருங்கேடு என்பதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதற்கான விலை தான் 27 உயிர்கள்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதியில் தமிழக அரசு உறுதியாக இருந்திருந்தால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை நிறைவேற்றியிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாறாக கூட்டத் தொடர் முடிவடைந்த பிறகு தான், புதிய சட்டம் இயற்றுவதற்கு பதில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சட்ட அமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு மட்டும் தான் தாக்கல் செய்யப்பட்டதே தவிர, சம்பந்தப்பட்ட சூதாட்ட நிறுவனங்களுக்கு இன்று வரை அறிவிக்கை கூட அனுப்பப்படவில்லை என்பது தான் உண்மை.

இடைப்பட்ட காலத்தில் பாமக கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவும், கடந்த ஜூன் 10-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டதன் காரணமாகவும், ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இது வரை அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. இந்தத் தாமதத்தை நியாயப்படுத்தவே முடியாது.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது என்பதை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது; ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் கடந்த ஓராண்டில் மட்டும் 27 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஈடு செய்ய முடியாத விலை ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது; ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று ஆளுனர் மூலமாக பிறப்பிக்க வேண்டும்.

இதில் தாமதம் செய்யப்பட்டால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் நடத்தப்பட்டது போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் பாமக நடத்தும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x