Published : 31 Jul 2022 10:20 PM
Last Updated : 31 Jul 2022 10:20 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார்.
வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள். இவர்கள், உள்ளூரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரேவதி, வனிதா, பவானியா, திலகா ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.
இவர்களில் ரேவதி, வனிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிளஸ் 2 வரை உள்ளூர் அரசுப் பள்ளிகளில் படித்த பவானியா, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை தமிழ் வழியில் படித்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த இவர், குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். குக்கிராமத்தில் இருந்து முதல் முயற்சியிலேயே அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பவானியா கூறியதாவது. பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படித்து வந்தேன். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டிருந்தேன்.
அங்கு, ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார் பேசியதும், அதன்பிறகு, கல்லூரி விழாவுக்கு வந்த சார் ஆட்சியராக பணிபுரிந்த சரயு பேசியதும் எனக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. அங்கிருந்தான் எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது.
3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன். குரூப் 1 தேர்வுக்கு 2021-ல் நடைபெற்ற முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அதே ஆண்டில் சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் 2021-ல் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தேன்.
நிகழாண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்வழிக் கல்விக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணி கிடைத்துள்ளது.
ஏழை குடும்பத்தில் பிறந்து, தன்னம்பிக்கையோடு படித்து, 66 பேரில் ஒருவராக எனக்கு இந்த பணி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனினும், குடிமைப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதே லட்சியம். குரூப் 1 எழுத்துத் தேர்வு, நேர்காணலுக்கு உரிய பயிற்சியும், அதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜன் செய்தது பேருதவியாக இருந்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT