Published : 31 Jul 2022 06:43 PM
Last Updated : 31 Jul 2022 06:43 PM

மழைக்காலத்தில் முடங்கும் மதுரை: வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்; ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

மதுரை: மதுரை மாநகரில் வைகை ஆறு, கண்மாய்கள் போன்ற ஏராளமான நீர் ஆதாரங்கள் இருந்தும் இயற்கை இலவசமாக கொடுக்கும் மழைநீரை அதில் சேமிப்பதற்கு மழைநீர் கால்வாய் கட்டமைப்பு இல்லாததால் மழைக்காலத்தில் மதுரை வெள்ளத்தில் தத்தளிப்பதோடு மழைநீரும் சேமிக்கப்படாமல் வீணாகி வருகிறது.

மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களும் நகர்ப்பகுதியிலேயே வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் அடர்த்தி மிகுதியால் நகர்பகுதியில் சிறு காலியிடங்களைக் கூட வீணாக்காமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதனால், நகர்ப்பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகையும், வாகனப் பெருக்கமும் அதிகரித்து விட்டது. அதற்கு தகுந்தவாறு சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நகரச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பழகிப்போய்விட்டது.

தற்போது அடுத்தக்கட்டமாக குடியிருப்புகள் முதல் மாநகராட்சி சாலைகள், நெடுஞ்சாலைத்துறை சாலைகள் வரை மழைநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு வழிந்தோடுவதற்கு வசதி இல்லாமல் மாநகரச் சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாகிவிட்டது.

முக்கிய சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் இருந்தாலும் அவற்றில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் குப்பைகள், கட்டிடக்கழிவுகளை கொட்டுகின்றனர். முட்புதர்கள் நிறைந்தும் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை. தற்போது பெய்யும் தென்மேற்கு பருவமழை, அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் வருகிறது. அதற்காக பெயரளவுக்கு கூட தற்போது மாநகராட்சி மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை.

அதனால், கடந்த ஒரு வாரமாக மதுரையில் பெய்யும் மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மழைபெய்யும் நேரத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சாலையோரங்களில் பார்க்கிங் செய்த கார், இருசக்கர வாகனங்களை வெள்ளம் மூழ்கடிப்பதால் மக்கள் அவற்றை எடுக்க முடியவில்லை.

நேற்று (சனிக்கிழமை) மதுரை மாநகரில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு நான்கு மாசி வீதிகள், பெரியார் பஸ்நிலையம், ஆரப்பாளையம் ரயல்வே சுரங்கப்பாதை, சிம்மக்கல் ரவுண்டானா, சிம்மக்கல சொக்கநாதர் சன்னதி, ராஜாமில் சாலை கர்டர் பாலம், மதுரை கே.புதூர் பஸ்நிலையம் முதல் ஐடிஐ சாலை சந்திப்பு வரை, கோரிப்பாளையம் சிக்னல் முதல் தல்லாக்குளம் தமுக்கும் மைதானம் வரை, காந்திமியூசியம் சாலை, சேதுபதி பள்ளி சாலை, பழங்காநத்தம் ரவுண்டானா போன்ற நகரின் முக்கிய 50க்கும் மேற்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் மூழ்கின.

இந்த சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மக்கள் எடுக்க முடியாமல் வெள்ளத்தில் மூழ்கின. ஒட்டுமொத்த நகரப் போக்குவரத்தும் இந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இயக்கப்பட்ட சில மாநகர பஸ்கள், மின்தடை ஏற்பட்டதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மழைக்குள் மக்கள் சிக்கி கொண்டனர். ஆரப்பாளையம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஒரு வேன் பாலத்தை கடக்க முயன்றபோது அது வெள்ளத்தில் மூழ்கியது.

பழைய பெரியார் பஸ்நிலையம் இருக்கும்போது அங்கு நான்கு சாலை சந்திப்பு பகுதி ஒரு மணி நேர மழைக்கு தண்ணீரில் மூழ்கும். தற்போது ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக புதிய பஸ்நிலையம் கட்டியும் வழக்கம்போலேவே மழைக்காலத்தில் அப்பகுதி தண்ணீரில் மிதக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் தேங்கும் மழைநீரை அருகில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்ததாக கூறினர். ஆனால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு செல்வதில்லை.

மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் புதிய சாலைகளை போடும்போது மழைநீர் கால்வாய் அமைப்பதில்லை. அப்படியே அமைத்தாலும் அந்த கால்வாய்கள் கண்மாய், வைகை ஆற்றுடன் இணைக்கும் வகையில் தொடர்ச்சியாக அமைக்கப்படுவதில்லை.

மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த பொறியாளர் கார்த்தியேன் கூறுகையில், ''சிங்கப்பூர், மலேசியாவில் சாலைகளிின் இரு புறமும் மழைநீர் புகும்வகையில் கம்பிகளை கொண்டு மூடப்பட்ட திறந்த வெளி மழைநீர் கால்வாய்கள் அமைத்துள்ளனர். அங்கு மக்கள் தனிப்பட்ட முறையில் ஆழ்துளை கிணறு போடுவதற்கு அனுமதியில்லாததால் மழைநீரை மறுசூழற்சி செய்து மக்கள் உபயோகத்திற்கு வழங்குகிறது. ஆனால், மதுரையில் குறைந்தப்பட்சம் நீர்நிலைகளுடன் சாலையோர கால்வாய்களை இணைக்கும் திட்டம் கூட இல்லை. மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமெண்ட் சாலை போட்டுள்ளனர்.

அதனால், அங்கு பெய்யும் தண்ணீர் பூமிக்குள் செல்லாமல் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில்தான் மதுரையின் ஒட்டுமொத்த நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. மக்கள் தினமும் திருவிழா போல் இப்பகுதியில் திரள்கின்றனர். ஆனால், இப்பகுதியில் மழைநீரை தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்றுவதற்கு எந்த திட்டமும் இல்லை.

நகர்ப்பகுதியே இப்படியென்றால் இணைக்கப்பட்ட புறநகர் வார்டு மக்கள், சாலைகள் அவலம் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை.

மதுரை மாநகர சாலைகளில் பெய்யும் மழைநீர், குடியிருப்புகளில் பெய்யும் மழைநீரை இணைத்து வைகை ஆறு, அருகில் உள்ள நீர்நிலைகளில் சென்றடைய வைக்க சரியான மழைநீர் கால்வாய் கட்டமைப்பு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அவ்வப்போது மழைநீரை வெளியேற்ற தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது.

போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மதுரை மாநகரின் மழைநீர் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த வேண்டும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x