Published : 31 Jul 2022 01:34 PM
Last Updated : 31 Jul 2022 01:34 PM
கோவை: புதிய சொத்துவரி விதிப்புக்காக, மாநகரை (மாநகரில் உளள விரிவிதிப்பு இனங்களை) 4 மண்டலங்களாக பிரித்து மாநகராட்சியால் அடிப்படை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் 30 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வரிவிதிப்பு இனங்கள் உள்ளன. மாநகராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் முன்பு 5 வகைகளிலும், இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டட 40 வார்டுகளில் 11 வகைகளிலும் என மொத்தம் 16 வகைகளில் சொத்துவரி விதிக்கப்பட்டு வந்தது.
இந்த வரிவிதிப்பு வித்தியாசத்தை போக்கி, பேருந்து செல்லும் சாலைகளை மையப்படுத்தி 'ஏ' மண்டலம், பிரதான சாலைகளை மையப்படுத்தி 'பி' மண்டலம், உட்புற தெருக்களை மையப்படுத்தி 'சி' மண்டலம் என மூன்றாக பிரித்து, மண்டலப் பகுப்பாய்வின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியால் வரி சீராய்வு செய்யப்பட்டது இதுதொடர்பாக பரிந்துரைகள் சமர்ப்பிக்க மாநகராட்சியின் கணக்குகள் பிரிவு, வருவாய்ப்பிரிவு மற்றும் 5 மண்டல உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மண்டல அடிப்படையில் அமல்படுத்தும் போது, குறிச்சி, குனியமுத்தூர் ஆகியவற்றை தவிர மீதமுள்ள பகுதிகளில் அதிக வரி உயர்வு ஏற்படும் பாதிப்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே, புதிய சொத்துவரி விதிப்புகளுக்கு என, ஏ, பி, சி, டி என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, வணிகம், சிறப்புக் கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என வரிவிதிப்பு இனங்களை வகைப்படுத்தி, ஒரு சதுரடிக்கு எவ்வளவு என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த கட்டண விவரம் நேற்றைய (ஜூலை 30-ம் தேதி) மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, குடியிருப்புக்கு கட்டணமாக சதுரடிக்கு ஏ மண்டலத்தில் ரூ.2.50, பி மண்டலத்தில் ரூ.2.20, சி மண்டலத்தில் ரூ.1.70, டி மண்டலத்தில் ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனத்துக்கு ஏ மண்டலத்தில் ரூ.4.40, பி மண்டலத்தில் ரூ.3.85, சி மண்டலத்தில் ரூ.3, டி மண்டலத்தில் ரூ.2.65-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழிற்சாலை, வணிகம், சிறப்புக்கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்கலாம்: இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ''புதிய சொத்துவரி விதித்தலுக்கு, வரிவிதிப்பு இனங்கள் 4 மண்டலங்களாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விகிதம் தொடர்பாக, கவுன்சிலர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்குள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம், அதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT