Published : 31 Jul 2022 04:20 AM
Last Updated : 31 Jul 2022 04:20 AM
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதுமே, மாமன்ற அதிமுக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும், சொத்துவரி உயர்வைத் திரும்பப் பெறவும், மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னைமாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த தற்காலிகமாக 453 ஆசிரியர்களை நியமிக்க மன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிப் பள்ளி அலுவலகம், நிர்வாகம் போன்ற பணிகளைமேம்படுத்த 92 கணினி உதவியாளர்களை நியமித்தல், கற்றல், கற்பித்தல் போன்ற கல்விசார் பணிகளை மேம்படுத்த 70 கணினி ஆசிரியர்கள், 66 இளநிலை உதவியாளர்கள் நியமித்தல், மாணவியர் பாதுகாப்பு மற்றும் பள்ளி கட்டிட பாதுகாப்புக்காக 326 காவலர்களை நியமித்தல், மாநகராட்சி மழலையர் வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்ட 318 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 253 ஆயாக்களுக்கு பள்ளிமேலாண்மைக் குழுக்கள் மூலமாகஊதியம் வழங்குதல் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 70 ஆயிரத்து 99 மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூ.4 கோடியே 44 லட்சத்தில் சீருடை வாங்கி இலவசமாக வழங்கவும், பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக மாணவர் தலைவர்களை நியமித்து ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் செலவில் மாணவத் தலைவர்கள் அணியும் பதக்கங்கள் தயாரித்து வழங்குதல் போன்ற பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை மட்டுமல்லாது, திடக்கழிவு மேலாண்மைத் துறையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 200 பரப்புரையாளர்களை நியமித்தல், ரூ.70 லட்சத்தில் சென்னையில் 5 இடங்களில் காற்றின் தரத்தைகண்காணித்தல், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 10 குளங்களை சீரமைத்தல், பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலை, நுங்கம்பாக்கம் காதர்நவாஸ்கான் சாலை ஆகியவற்றில் நடைபாதை வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் மாமன்றத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. மொத்தம் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT