Published : 30 Jul 2022 06:07 PM
Last Updated : 30 Jul 2022 06:07 PM
புதுச்சேரி: “மின் துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த மின் சக்தி திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியது: ‘‘அனைத்து துறைகளிலும் நம்முடைய நாடு தன்னிறைவு பெற்று தலைசிறந்த நாடாக விளங்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரி மின் துறையின் வளர்ச்சியை எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. புதுச்சேரியில் 1909-ல் மின் சேவை தொடங்கப்பட்டது. அப்போது ஆயிரம் நுகர்வோர்தான் இருந்தார்கள். இன்றைக்கு 470 மொகா வாட் மின்சாரம் 591 மெகா வாட் மின்சாரம் நம்மிடம் உள்ளது.
இன்னும் கூடுதலாக மின்சாரம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். அதேநேரத்தில் மின் இழப்பிலும் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கிறோம்.
தற்போது மின் இழப்பு 12 சதவீதமாக உள்ளது. இதனை 6 –8 சதவீதமாக குறைக்கலாம். இந்த இழப்பை மேலும் குறைப்பதற்கான பொறுப்பு மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உள்ளது. பல மாநிலங்களில் நூறு சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப பல இடங்களில் மின்சாரம் பெற்று மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் பவர் கார்ப்பரேஷன் மூலம் கொஞ்சம் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். மேலும், சூரிய ஒளி மின் உற்பத்திக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் மற்றும் அரசு கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒளிமயமான வெளிச்சமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.
ஆனால், மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு துறையானது குறைந்த அளவு மின் விநியோகம் செய்கிறது. நம்மிடம் தேவையான அளவுக்கு மேல் மின்சாரம் உள்ளதால் அதிக மின் சிக்கனம் அவசியமில்லை. மின் விளக்குகள் அனைத்தும் சரியாக எரிய வேண்டும்.
60 அடிக்கு ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு வருகிறது. குறைந்த வோல்ட் உள்ள எல்இடி விளக்குகள் பொருத்தப்படுவதை தவிர்த்து அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்த வேண்டும்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் தெருவிளக்குகள் தொடர்பாகன கோரிக்கைகளை வைத்தால் அதனை உடனே அமைத்து கொடுக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை செலுத்த தேவையான நிதியை அரசு ஒதுக்கி கொடுக்கும். நம்முடைய செயல்பாடுகள் காலதாமதம் இல்லாமல் இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜர் வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் கல் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு தர வேண்டியது அரசின் கடமை. பொதுமக்கள் கேட்கும்பொழுது உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
நிறைவான சேவையை மக்கள் மின் துறையிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அதனை மனதில் வைத்துக் கொண்டு சேவை மனப்பான்மையோடு மின்துறை ஊழியர்கள் பணி ஆற்ற வேண்டும். புதுச்சேரியை 100 விழுக்காடு அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மாநிலமாக திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழிற்சாலைகளுக்கும் விரைவில் மின் இணைப்பு கொடுத்தால் நிறைய தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது. படித்துவிட்டு வரும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும். இதற்காக நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். எனவே தொழிற்சாலை தொடங்க தேவையான மின் இணைப்பை எளிதாக கொடுக்க வேண்டும்.
மேலும், மக்களும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வசதி இருக்கிறது என்பதற்காக தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது. தேவைக்கேற்ப மின்சாரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’’ என்று ரங்கசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT