Published : 30 Jul 2022 03:18 PM
Last Updated : 30 Jul 2022 03:18 PM

அயனாவரம் சம்பவம் | விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மரணம்: கொலை வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தும்படி சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் துறையில் "காவல் துறையின் நண்பனாக" அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நித்தியராஜை கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ஐ.சி.எஃப். காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலிங்கம் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார். இதன்பின்னர் அவர் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

5 நாட்கள் கடந்த ஜனவரி 16-ம் தேதி நித்தியராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக நித்தியராஜின் தாயார் பூங்குழலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "காவல்துறையினர் தாக்கியதால் தான் எனது தன் மகன் உயிரிழந்தார். அதனால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். மகனின் மரணத்திற்கு இடைக்கால இழப்பீடாக பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இருப்பதாக கூறி ஒருவரை மிரட்டி, செல்ஃபோன் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தான் நித்தியராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரை பிடிக்க சென்றபோது தப்பித்த ஓடியதால் கீழே விழுந்ததில் நித்தியராஜுக்கு காயம் ஏற்பட்டது. காவல் துறை தாக்கவில்லை" என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி இளந்திரையன், சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென சிபிசிஐடி போலிசாருக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, அந்த தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x