Published : 30 Jul 2022 01:55 PM
Last Updated : 30 Jul 2022 01:55 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள 534 கிராமங்களில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செஸ் விளையாட்டு தோன்றிய தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது. செஸ் ஒலிம்பியாட் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், போட்டிக்கான காய் நகர்த்துதலை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.
75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் இயக்கம் நடத்தப்படவுள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மக்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும்.
நாடு முழுவதும் 34,000 கிராமங்களில், சுமார் ரூ.26,000 கோடி செலவில் 4-ஜி சேவைகளை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 534 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பிஎஸ்என்எல் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், சந்தைப்படுத்துதலும் வலிமைப்படுத்தப்படும். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தினந்தோறும் புதிய இணைப்பு வழங்கி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தேசிய விருது வென்ற நடிகர் சூர்யா உள்ளிட்ட தமிழ் திரையுலகிலிருந்து விருதுபெற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில் நாடு முழுவதும் 200 கோடிக்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் 75 நாட்களுக்கு தடுப்பூசி அமிர்த பெருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
செப்டம்பர் 17ம் தேதி சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் சுத்தப்படுத்தப்படும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கான செலவில், சாகர்மாலா திட்டம் மற்றும் மத்திய மீன்வள அமைச்சகம் சார்பில் 50:50 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முடிவடைந்து, விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை காசிமேடு, கேரளாவில் கொச்சி, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அரசுகள் ஒத்துழைத்து இணைந்து பணியாற்றி வருகிறோம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே கூட்டாட்சி தத்துவம். நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள 2047 ஆம் ஆண்டில் உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா திகழும்" என்று எல்.முருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT