Published : 30 Jul 2022 06:59 AM
Last Updated : 30 Jul 2022 06:59 AM

வி.சி.க. விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடக்கிறது: கர்நாடக  முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘விருதுகள் வழங்கும் விழா - 2022’ சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கட்சி யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகின்றனர். டெல்லி மாநில சமூகநலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் சிறப்புரையாற்றுகிறார்.

சான்றோர்களுக்கு விருதுகள்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படவுள்ளது. விருதைப் பெறும் அவர் ஏற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை - பெரியார்ஒளி விருது, விஜிபி உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் - காமராசர் கதிர் விருது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.செல்லப்பன் - அயோத்திதாசர் ஆதவன் விருது, எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி - காயிதேமில்லத் பிறை விருது, தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.இராசன் - செம்மொழி ஞாயிறு விருது, எழுத்தாளர் இரா.ஜவஹர் (மறைவு) - மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரைப் போற்றும் வகையில், புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரில் ‘அம்பேத்கர் சுடர்’ என்னும் விருது முதன்முதலில் 2007-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெறுவோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவுக்கேடயம் மற்றும் ரூ.25 ஆயிரம் பொற்கிழி ஆகியவை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மார்க்ஸ் மாமணி விருது

தொடர்ந்து, 2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் மாமேதை கார்ல் மார்க்ஸ் பெயரில் ‘மார்க்ஸ் மாமணி விருது’ முதல் முறையாக வழங்கப்படுகிறது. அவ்விருதுகளைப் பெறுவோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவுக்கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழி வழங்கப்பட வுள்ளது.

சமூகநீதி, நல்லிணக்கம்

விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபடுவோரை ஊக்கப்படுத்துவதும், தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப்படுத்துவதும், தலித் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும், சமூகநீதிக்கும், தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிப்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இவ்விழா ஆண்டுதோறும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 85 பேருக்கு விருது

கடந்த 15 ஆண்டுகளில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் வெ.நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் இரா.நல்லக்கண்ணு. திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 85 சான்றோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x