Published : 30 Jul 2022 06:25 AM
Last Updated : 30 Jul 2022 06:25 AM
சென்னை: இளைஞர்களுக்கு வளரும் சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை புதிய கல்விக் கொள்கை அளிக்கிறது. இளைஞர்கள் வெற்றியே இந்தியாவின் வெற்றி என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் 69 மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, அன்றிரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, காரில் அண்ணா பல்கலைக்கழகம் வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழா தொடங்கியதும், உயர்கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான க.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துணைவேந்தர் ரா.வேல்ராஜ் பல்கலைக்கழக சாதனைகளை விளக்கினார். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி. பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதன்பின், பல்வேறு பிரிவுகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இளைஞர்களின் கனவுகளும் நனவாக வாழ்த்துகிறேன். பட்டம் பெற்ற மாணவர்களின் சாதனைகளுக்கு, அவர்களது பெற்றோரின் தியாகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. இன்றைய சூழலில் நம் நாடு மட்டு
மின்றி, உலகமே இந்திய இளைய தலைமுறையினரை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில், நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான இயந்திரங்கள். இந்தியா தான் உலகத்தின் வளர்ச்சிக்கான இயந்திரம். இது சிறந்த கவுரவம். மிக முக்கியமான பொறுப்பில் சிறந்து விளங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இளைஞர்களைப் பற்றி பேசும்போது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை எப்படி மறக்க முடியும். அவர், அண்ணா பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். அவர் இங்கு தங்கியிருந்த அறை, நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது சிந்தனைகளும், மதிப்பீடுகளும் இன்றும் இளைஞர்களை வழிநடத்துகிறது. கரோனா பெருந்தொற்று என்பது யாரும் எதிர்பார்க்காதது. இதை எதிர்கொள்வதற்கான திட்டம் என்பது யாரிடமும் இல்லை. ஆனால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை துன்பங்கள் நமக்கு வெளிப்படுத்தின. இந்தியா தனக்கு தெரியாததை தன்னம்பிக்கையுடன் கையாண்டது. இன்று இந்தியாவின் அனைத்து பிரிவுகளும் புதிய வாழ்வு பெற்றுள்ளது. தொழில்துறை, புத்தாக்கத் தொழில், முதலீடுகள், சர்வதேச வர்த்தகம் என எதுவாக இருந்தாலும் இந்தியா தான் முன்னோடியாக உள்ளது.
குறிப்பாக எலெக்ட்ரானிக் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு உலகின் 2-வது மொபைல் போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்தது. புத்தாக்கத் துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 15 ஆயிரம் சதவீதம் தொழில்கள் உருவாகியுள்ளன. அதாவது, 2016-ல் 470 ஆக இருந்த புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொழிற்சாலை மற்றும் புத்தாக்கம் சரியாக இருந்தால் முதலீடுகள் கட்டாயம் தொடரும். கடந்த ஆண்டில் எப்போதும் இல்லாத சாதனையாக 83 பில்லியன் டாலர் அளவுக்கான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. கரோனா காலத்துக்குப்பின் நமது புத்தாக்கத் தொழில்களும் அதிக அளவில் முதலீடுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன. இவற்றின் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகளில் இந்தியா மிகப்பெரிய சாதனைகளை பதிவு செய்துள்ளது. நீங்கள் பெரும்பாலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை படிக்கிறீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலகட்டத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. முதலாவது, தொழில்நுட்ப பயன்பாட்டின் வளர்ச்சி. மிகவும் ஏழ்மையானவர்கூட இதை பயன்படுத்துகின்றார். விவசாயிகள் செயலிகள் மூலம் சந்தை, வானிலை, விலைநிலவரம் குறித்த தகவல்களை பெறுகின்றனர். சிறு வியாபாரிகள்கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர். இதில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.
இரண்டாவது, துணிவு மீதான நம்பிக்கை. முந்தைய காலங்களில் நல்ல சம்பளம் உள்ள பணியை பெற்றாலே அவர் முழுமை பெற்றவராக கூறிவந்தனர். இளம் தொழில்முனைவோரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு இடத்தில் பணியாற்றுவதைவிட, புத்தொழில் செய்வது எளிதாக உள்ளது. மூன்றாவது, சீர்திருத்தத்துக்கான மனோபாவமாகும். முன்பு ஒரு வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது என்பதாக இருந்தது. ஆனால், நாம் அதை மாற்றிவிட்டோம். ஒரு வலுவான அரசு என்பது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, மக்களின் திறமைக்கு இடம் கொடுக்கிறது. இதன்மூலம் மக்களுக்கு சுதந்திரமும் கிடைக்கிறது.
புதிய கல்விக் கொள்கையானது, இளைஞர்களுக்கு வளரும் சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. ட்ரோன்கள், விண்வெளி மற்றும் புவியியல் துறைகளில் நடந்துள்ள சீர்திருத்தங்கள், புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பிஎம் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் உருவாக வழிவகுத்துள்ளது. இவை உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி நிலைத்து வளர்வதற்கான களத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளன.
அடுத்த 25 ஆண்டுகள் உங்களுக்கும் இந்தியாவுக்கும் முக்கியமான காலகட்டமாகும். 100-வது ஆண்டு சுதந்திர காலத்தில், பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் சொந்த எதிர்காலம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைப்பார்கள். உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் படிப்பினை, இந்தியாவின் படிப்பினை. உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றி. நீங்கள் எப்போது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் திட்டமிடுகிறீர்களோ, அப்போதே நாட்டுக்கும் சேர்த்து திட்டமிடுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இது உங்களின் தலைமுறைக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பாகும். இதை கருத்தில் எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
70 ஆண்டுகளுக்கு பிறகு
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு 70 ஆண்டுகள் கழித்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரல்களில் அடிபட்ட மாணவரிடம் நலம் விசாரித்த மோடி
தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களில் ஒருவர் பட்டம் பெற வந்தபோது, அவரது கைவிரல்களில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருப்பதை பிரதமர் கவனித்தார். அவரிடம் இது என்ன கட்டு என்று பிரதமர் விசாரித்தார். அதற்கு அந்த மாணவர் லேசாக அடிபட்டுவிட்டது என்று கூறினார். உடனடியாக பிரதமர் மோடி, கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவரிடம் கூறினார். இதுகுறித்து அந்த மாணவர் கூறும்போது, பிரதமர் மோடியின் கைகளால் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எனது கைவிரல்களில் காயம் இருந்ததை பார்த்து அக்கறையுடன் விசாரித்தார். கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT