Published : 04 Oct 2016 10:16 AM
Last Updated : 04 Oct 2016 10:16 AM
நாட்டிலேயே அதிக அளவு லாட்டரி டிக்கெட்கள் தமிழ்நாட்டில் விற்பனையாயின. மணிப் பூர், நாகாலாந்து, மிசோரம், அசாம் என பல மாநிலங்களையும், பூடான் நாட்டையும் நமக்கு அறிய வைத்த பெருமை கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் லாட்டரி விற்பனைக்கு உண்டு. அந்த டிக்கெட்களில் தங்களின் மாநில மொழியை அச்சிடாமல் தமிழை முன்னிலைப்படுத்தினர்.
இந்த லாட்டரி விற்பனை தொழிலில் லட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டனர். இதனைக் கண்ட சமூக விரோதிகள், போலி லாட்டரி டிக் கெட்களை அச்சடித்தனர். உதாரண மாக ஒரு லாட்டரி டிக்கெட் 10 சீரியலில் வெளியிடப்பட்டால், போலி லாட்டரி டிக்கெட்கள் அதற்கு அடுத்த சீரியலில் அச்சடிக்கப்பட் டன. இதனால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேல் லாட்டரிக்கு செலவிட்டனர். லாட்டரியை தடை செய்ய வேண் டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் லாட்டரி டிக்கெட் விற்ப னைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் சிலர் லாட்டரி டிக்கெட் களைத் தடையை மீறி விற்கத் தொடங்கினர்.
தற்போது லாட்டரி டிக்கெட் களுக்கு பதிலாக விலாசமில்லாத பில் புக்கில் கார்பன் காப்பி வைத்து லாட்டரி டிக்கெட்டின் பெயர், குலுக்கல் எண், தேதி, சீரியல் எண் போன்றவற்றை அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை 50 ரூபாயில் தொடங்கி 500 ரூபாய்க்கும் மேல் போகிறது. 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி, அந்த சீட்டுக்கு பரிசு விழுந்தால் கடைசி பரிசே 2,500 ரூபாய் கிடைக்கும். யாரிடம் டிக்கெட் வாங்கினோமோ அவரிடமே பரிசுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். புதிய நபர்கள் இந்த டிக்கெட்களை வாங்க முடியாது. இதற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே இந்த டிக்கெட் விற்கப்படும்.
கேரள மாநில லாட்டரி டிக்கெட் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இந்த லாட்டரிக்கான முடிவுகளை ஸ்மார்ட் போனில் Kerala Lottery Results என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து டிக்கெட் வாங்கி யவர்கள் குலுக்கல் முடிவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக விவரமறிந்த ‘தி இந்து’ வாசகர் அனுப்பிய வீடியோ கிளிப்பிங்கில் விழுப்புரம் நகரில் உள்ள வீதியில் குடோன் போல ஒரு இடத்தில் நீண்ட மேஜை அருகே நாற்காலியில் அமர்ந்த நான்கைந்து பேர் வேக மாக பட்டியலைப் பார்த்து பில் போடுகின்றனர். இந்த பில்லே லாட்டரி டிக்கெட்டாக பாவிக்கப் பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வ லர் அகிலன் கூறும்போது, “விழுப் புரம் பகுதியில் லாட்டரி விற்பனை அதிக அளவில் உள்ளது. இதற்கு ஏஜென்ட்களும் உள்ளனர். அவர் கள் தங்களின் வாடிக்கையாளர் களுக்கு விலாசமில்லாத பில்லில் லாட்டரி டிக்கெட் எண் எழுதி கொடுக் கின்றனர். பரிசு விழுந்தால் யாரிடம் வாங்கினோமோ அவர்களிடமே பில்லை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஏஜென்ட் கள் யார் என்று போலீஸுக்கு நன் றாகவே தெரியும் இதனால் கூலித் தொழிலாளர்கள், சிறுதொழில் செய்பவர்களின் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இதை முற்றிலும் ஒழிக்க வேண் டும்” என்றார்.
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கேட்டபோது, “லாட்ட ரிக்கு என தனிச் சட்டப் பிரிவு ஏதும் இல்லை. மொபைல் கேம்ஸ் லிங்கில் இதுவும் தொடர்புடையது. இதற்கான சட்டப் பிரிவு மிகவும் பலவீனமானது. இதில் கைப்பற் றப்படும் ரொக்கப் பணத்தைக் கொண்டே சட்டப் பிரிவுகளை உட் படுத்த முடியும். சட்டத் திருத்தம் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றனர்.
இதுபற்றி விழுப்புரம் எஸ்பி நரேந்திர நாயரிடம் கேட்டபோது, “தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற் பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்” என்கிறார்.
அதிர்ஷ்டத்தின் விளைவு
லாட்டரி என்பது அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்த ஒரு செயலின் விளைவு என்ற பொருளாகும். இச்சொல் நெதர்லாந்தின் டச்சு மொழி சொல்லான லாட்டரிஜே (Loterije) அல்லது பிரெஞ்ச் வார்த்தையான லாட்டரீ என்ற வார்த்தையில் இருந்து தோன்றியிருக்கலாம்.
வருவாய் ஈட்ட நினைக்கும் அரசுகள் லாட்டரி விற்பனையை நடத்த அனுமதி தருகின்றன. இதில் பங்கேற்பவர்கள் தாங்கள் விரும்பிய எண்ணை அல்லது பரிசுச் சீ்ட்டை வாங்குகிறார்கள். குலுக்கல் முறையில் வெற்றி எண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. லாட்டரி திட்டங்களைச் செயல்படுத்த ஆகும் செலவு மற்றும் அரசுக்கான வருவாய் போக உள்ள தொகை பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் பரிசுத் தொகைக்கு வரி செலுத்தவேண்டும். உலகம் முழுவதும் லாட்டரி விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது.
- சுகால்சந்த் ஜெயின், ஜென்சி சாமுவேல் எழுதிய ‘லாட்டரி அதிர்ஷ்டத்துக்கு அப்பால்’ என்ற நூலிலிருந்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT