Last Updated : 29 Jul, 2022 06:34 PM

 

Published : 29 Jul 2022 06:34 PM
Last Updated : 29 Jul 2022 06:34 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனி தீயணைப்பு நிலையம்: மூன்று ஆண்டு இழுப்பறிக்கு பின் பணிகள் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்காக பிரத்யேக தீயணைப்பு நிலையம் அமைய உள்ள இடம்.

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் 3 ஆண்டு இழுப்பறிக்கு பின் தொடங்கியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோயிலை சுற்றிலும் நெருக்கடியான பகுதி என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் விதமாக சுழற்சி முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் தினமும் ஈடுபடுகின்றனர். கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் பணியிலுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

இது தவிர, சட்டம், ஒழுங்கு, குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கென தனி காவல் நிலையமும் செயல்படுகிறது. ஆனால், கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்துக்களை தடுக்க, திடீர் நகரில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் கோயில் பகுதிக்கு தீயணைப்பு வாகனம் துரிதமாக வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, கோயிலின் கிழக்கு பகுதியில் அம்மன் சன்னதிக்கு செல்லும் கோபுரத்திற்கு வடக்கிலுள்ள வசந்த ராயர் மண்டபம் தீவிபத்தால் சேதமடைந்தது. அப்போது, தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவசர நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட கோயில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அவசியம் என்ற கோரிக்கை எழுந்தது.

இச்சம்பவத்திற்கு பின், மீனாட்சி அம்மன் கோயிலுக்கென பிரத்யேக தீயணைப்பு நிலையம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, கோயில் மேற்கு கோபுரம் அருகே திடீர் நகர் தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டில் தற்காலிகமாக செயல்படும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்கு வட பகுதியில் மண் பரிசோதனை மையம், பூங்கா இருந்த இடத்தில் சுமார் 12 சென்ட் இடத்தில் மீனாட்சி கோயிலுக்கான புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு தயாராக இருந்தும், கட்டுமான பணி தொடங்குவதில் சுமார் 3 ஆண்டாக தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது. புதிய தீயணைப்பு நிலையம் அமையவிருக்கும் இடத்தில் சுமார் 200 ஆண்டு பழமையான அரசமரம் ஒன்று இருப்பதே தாமதத்திற்கு காரணமாக என, சொல்லப்பட்டது.

மரத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே போதிய இடவசதி கிடைக்கும், மரத்தால் கட்டிடத்திற்கு தேசம் ஏற்படலாம் என, காவல் துறை வீட்டு வசதி வாரியம் தரப்பிலும் கருத்து கூறப்பட்டது. இதனால் கட்டுமான பணியை தொடங்குவதில் தொடந்து தொய்வு நிலை ஏற்பட்டது. மரத்தை வெட்டுவதற்கான முயற்சியும் நடந்தது. இருப்பினும், பழமையான மரத்தை எடுக்காமல் ஒதுக்கிவிட்டு கட்டுமான பணியை தொடங்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் முடிவெடுத்தனர்.

இதன்படி, மரத்தை வெட்டாமலே ஒதுக்கிவிட்டு புதிய தீயணைப்பு நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் முடிந்து, விரைவில் கட்டுமானத்தை தொடங்க இருப்பதாக தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறைக்கான வீட்டுவசதி வாரிய பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான புதிய தீயணைப்பு நிலையம் ரூ.1.17 கோடியில் 3,053 சதுரடி பரப்பளவில் அமைக்கிறது. ஒரே நேரத்தில் இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், வீரர்கள் தங்கும் அறைகள், ஓய்வறைகள் என, தேவையான கட்டிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பணி தொடங்கிய நாளில் இருந்து சுமார் ஓராண்டுக்குள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த புதிய தீயணைப்பு நிலையத்தால் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீவிபத்துக்களை துரிதமாக தடுக்க முடியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x