Published : 29 Jul 2022 03:18 PM
Last Updated : 29 Jul 2022 03:18 PM
புதுச்சேரி: தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் அகற்றும் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதாக புதுச்சேரி சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் தமிழர் களம் அலுவலகத்தில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு: ''புதுவையில் அமைக்கப்பட்டு வரும் தியாகச் சுவரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சாவர்க்கர் பெயரை பதித்துள்ளார். சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திரட்டிய படைக்கு எதிராக செயல்பட்டவர். சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டு துரோகம் இழைத்தவரின் பெயரை தியாக சுவரில் பதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, புதுவையில் உள்ள கட்சி, சமூக அமைப்புகளின் சார்பில் 30ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சின்னக்கடை மணிக்கூண்டு அருகே ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று 75வது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் உள்ள சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது" என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்கு தமிழர் களம் செயலாளர் அழகர் தலைமைத் தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், திராவிடர் கழகத் தலைவர் சிவ வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், எஸ்டிபிஐ கட்சி பொதுச்செயலாளர் அப்துல்லா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அனிப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் பரகத்துல்லா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ்;
தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேல்சாமி, மனித உரிமைகள் மற்றும் நூகர்வோர் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, பீ போல்ட் அமைப்புத் தலைவர் பஷீர், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் ரமேஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் சாந்தகுமார், பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT