Published : 29 Jul 2022 02:05 PM
Last Updated : 29 Jul 2022 02:05 PM
“ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை தொட்டுப் பாருங்கள், பார்ப்போம்” என்று ஆர்.பி.உதயகுமாருக்கு ஓபிஎஸ் அணி தேனி மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம் சையதுகான் சவால் விடுத்தார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பழனிசாமி நீக்கினார். இந்த மோதல் காரணமாக அதிமுக தற்போது பழனிசாமி, ஓபிஎஸ் அணி என தனித்தனியாக செயல்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மின்கட்டண உயர்வைக் கண்டித்து பழனிசாமி அணி அதிமுக சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதனிடையே ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம் சையதுகான் கூறும்போது, “ரவீந்திரநாத் எம்.பி. எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நீங்கள் அனை வரும் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுங்கள். அதன் பிறகு நாங்களும் தேர்தலை சந்திக்கிறோம். பழனிசாமி தரப்பினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஓபிஎஸ்க்கு எதிராகவே ஆர்ப் பாட்டம் நடத்தி உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும் என்று உதயகுமார் பேசியுள்ளார். நீங்கள் இங்கு வந்து ஓபிஎஸ் வீட்டைத் தொட்டுப் பாருங்கள், பார்ப்போம். ஓபிஎஸ் துரோகம் எதுவும் செய்யவில்லை. பழனிசாமியும், உதயகுமாரும்தான் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளனர். சசிகலாவும், தினகரனும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் இணைய வந்தால் வரவேற்கத் தயார். இது எனது சொந்த கருத்து” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT