Published : 29 Jul 2022 06:43 AM
Last Updated : 29 Jul 2022 06:43 AM
கோவை: கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.433.06 கோடி அபராதம் விதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அடங்கிய கூட்டுக் குழு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள செங்கல்சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங்குள்ள செயல்பாடுகளை எப்படி முறைப்படுத்தலாம் என்பதை தெரிவிக்கவும் கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிமவளத்துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இவர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்து, பாதிப்பு ஏற்பட காாரணமானவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்கான கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தீர்ப்பாயம் அமைத்த குழு தடாகம் பகுதியில் ஆய்வு செய்தது.
177 செங்கல் சூளைகள் மூடல்
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாய நிலைக்குழுவுக்கு கடந்த 20-ம் தேதி அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையாம்பாளையம், பன்னிமடை ஆகிய 5 கிராமங்களில் டிஜிபிஎஸ் கொண்டு ஆய்வு செய்ததில், 1.10 கோடி கியூபிக் மீட்டர் அளவு மண் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள், ஆற்று நீர்வழித்தடங்களில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தெரியவந்தது.
எனவே, சட்டவிரோதமாத செயல்பட்ட 177 செங்கல் சூளைகளின் உரிமையாளர்களிடம் இருந்து இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டு தொகையை பெறலாம்.
அதன்படி, சட்டவிரோதமாக அள்ளப்பட்ட1.10 கோடி கியூபிக் மீட்டர் மண்ணுக்கு இழப்பீடாக ரூ.373.74 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியஅனுமதியின்றி 177 செங்கல்சூளைகள் இயங்கியுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.59.32 கோடியை சூளை உரிமையாளர்களிடம் இருந்து பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT