Published : 29 Jul 2022 01:21 AM
Last Updated : 29 Jul 2022 01:21 AM

கர்ப்பிணியை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து வந்த திருப்பூர் மலை கிராமத்தினர்: சாலை வசதிக்கு கோரிக்கை

திருப்பூர் அருகே மலைவாழ் கிராமத்தை 4 மாத கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து வந்த மலைவாழ் மக்கள்.

திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும் அவசர மருத்துவத் தேவைக்கு கூட நோயாளிகளை தொட்டில் கட்டி அழைத்து வரும் அவலத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மலைப்பகுதியிலிருந்து மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு சமவெளிப்பகுதியை அடையும் வகையில், வனப்பகுதியில் வழித்தடம் அமைத்து தர வேண்டும் என, பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் போராடி வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்குக்கூட, அப்பர் ஆழியாறு, காடம்பாறை வழியாக, 60 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைக்கு, நோயாளிகளை தொட்டில் கட்டி, பல மணி நேரம் கரடுமுரடான பாதையில், சுமந்து வர வேண்டியதுள்ளது. இதனால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே, பொன்னாலம்மன் கோயில் வரை தொட்டிலில் தூக்கி வந்து, உடுமலை, எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியதுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை, குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற நான்கு மாத கர்ப்பிணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மலைவாழ் கிராமத்து ஆண்கள், பெண்கள், அப்பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது: "திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலையிலிருந்து, குழிப்பட்டி வரை 6 கி.மீ. துாரத்தில், பாரம்பரிய வழித்தடம் உள்ளது. மலை மேலுள்ள 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களுக்கு, இந்தப்பாதை பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது பயன்படுத்த முடியாத நிலையிலும், வனத்துறையினர் கட்டுப்பாடு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், எங்கள் மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

இந்த வழித்தடத்தை மேம்படுத்தி, வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, எளிதான, சிரமமில்லாத வகையில், நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும். மழை காலங்களில், உடல் நலம் பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அரசும், வனத்துறையினரும் மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்ல திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை முதல், குழிப்பட்டி வரை வழித்தடம் அமைத்துத்தர வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x