Last Updated : 28 Jul, 2022 08:12 PM

 

Published : 28 Jul 2022 08:12 PM
Last Updated : 28 Jul 2022 08:12 PM

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சென்னையில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம்பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விளம்பரங்களில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை சேர்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் குடியரசுத் தலைவர் புகைப்படம் இடம்பெறவில்லை. பிரதமரின் வருகை ஜூலை 22-ல் தான் உறுதியானது. இதனால் முன் விளம்பரங்களில் இருவரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க முடியாது.

குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்கள் சர்வதேச அளவிலான நிகழ்வின் அழைப்பை ஏற்கிறார்கள், மறுக்கிறார்கள். எப்படியிருந்தாலும் நிகழ்வு தொடர்பான விளம்பரங்களில் சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிபலிக்கும் வகையில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும். எனவே, செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் தவிர்த்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x