Published : 28 Jul 2022 02:26 PM
Last Updated : 28 Jul 2022 02:26 PM
புதுச்சேரி: “அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து கோயில்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது: "இந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதனை வலியுறுத்தி இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த, இந்துகளின் உரிமை மீட்பு பிரசார பயணம் நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளின் சொத்துகள், அதன் வருமானங்கள், அந்த மதத்தின் வளர்ச்சிக்கும், மதமாற்றத்துக்கும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்துக் கோயில்களின் சொத்துக்கள், வருமானங்களை அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது. தமிழக அறநிலையத் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. கோயில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாமியர்களைப் போல இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
புதுச்சேரியிலும் அறநிலையத் துறையிடம் உள்ள கோயில்களுக்கு தனி வாரியம் அமைத்து தர வேண்டுமென புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் 5.25 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களில் 50 ஏக்கர் நிலங்களை காணவில்லை. இதில் பல ஏக்கர் நிலங்கள் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நகைகளை உருக்குவதை தமிழக அரசு கைவிட்டு, அந்த நகைகள் அப்படியே தொடர அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 90 சதவீதம் கோயில்களுக்கு அரசு நிர்வாக அலுவலர் நியமிக்கவில்லை. உரிய ஆய்வும் செய்யவில்லை. ஆனால், சிதம்பரம் கோயிலில் மட்டும் மிரட்டும் வகையில் ஆய்வு செய்கின்றனர். நீதிமன்ற அனுமதியின் பேரில்தான் சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். சிதம்பரம் கோயில் நிர்வாகம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் கடவுள் மறுப்பாளர்களான திமுக, திகவினர் அளித்த புகார்கள் தான்.
தமிழகத்தில் ஏழை இந்து மாணவருக்கு உதவித்தொகை இல்லை. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கின்றனர். தமிழகத்தில் கடவுள் மறுப்பாளர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி மாநில அரசு கடவுள் பக்தியுடன், ஆன்மிக அரசாக நடைபெறுகிறது" என்று காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT