Last Updated : 29 Sep, 2016 02:40 PM

 

Published : 29 Sep 2016 02:40 PM
Last Updated : 29 Sep 2016 02:40 PM

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணத்தில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பமின்றி, சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப். 26 தொடங்கி அக். 3 வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், உறுதிமொழி ஆவணம் மற்றும் ரூ. 20-க்கான பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் (சான்று உறுதி அலுவலர்) சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். உறுதிமொழி ஆவணத்தில் பகுதி ‘அ’வில் வேட்பாளரின் விவரம், நிரந்தரக் கணக்கு எண் (பான்), வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, தண்டனை ஏதும் பெற்றுள்ளாரா?, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்துகள் விவரம், தொழில், கல்வித் தகுதிகள் என 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அடுத்து பகுதி ‘ஆ’ வில், பகுதி ‘அ’ வில் குறிப்பிடப்பட்ட 1 முதல் 10 வரையிலான விவரங்களின் சுருக்கம் இடம் பெற்றுள்ளது.

கடைசியாக பக்கம் 10-ல் வேட்பாளரும், சான்றுறுதி அலுவலரும் கையொப்பமிட வேண்டும்.

இந்த தேர்தலில், புதிய நடைமுறையாக நோட்டரி பப்ளிக் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதி மட்டுமல்லாது, உறுதிமொழி ஆணையரும் (வழக்கறிஞர்களில் உறுதிமொழி ஆணையராக பதிவு செய்துள்ளவர்கள்) சான்றளிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதிமொழி ஆவணத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் வேட்பாளர்கள் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. மனுக்கள் திரும்பப் பெறுவது போன்ற செயல்களில் வேட்பாளரோ அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரோ எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனு வாபஸ் பெறும் நடைமுறைகளில் பிரச்சினையின்றி திடமான முடிவுகளை எடுக்க முடியும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்கும்போது, நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதியிடம் சான்று பெறத் தேவையில்லை. ரூ.20-க்கான பத்திரத்தில் வேட்பாளரே சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என்ற நடைமுறையையும் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடு பவர்கள் சான்றொப்பம் பெற பணம் செலவு செய்யத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x