Published : 28 Jul 2022 01:44 PM
Last Updated : 28 Jul 2022 01:44 PM

செஸ் போஸ்டர் விவகாரம் | பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? - கே.எஸ்.அழகிரி கேள்வி 

கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை: செஸ் போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி வினவியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகமே பெருமைப்படத்தக்க வகையில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை.

கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இப்போட்டிகள் தற்போது, சென்னைக்கு அருகில் நடைபெறுவது மிகுந்த வரவேற்புக்குரியது. மிகுந்த பொருளாதார இடர்ப்பாடுகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கி, அசுர வேகத்தில் ஏற்பாடுகள் நடைபெறுவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். இந்த சிறப்புமிகு ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கான விளம்பரப் பலகைகள் பரவலாக வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர்.

அந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x