Published : 28 Jul 2022 01:18 PM
Last Updated : 28 Jul 2022 01:18 PM
புதுடெல்லி: தருமபுரி மாவட்டத்திற்கு அதிஉயர் சிறப்புச் சிகிச்சை மையம் அமைக்கவேண்டுமென்று தருமபுரி எம்.பி.செந்தில்குமார் மத்திய சுகாதார அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு அதி உயர் சிறப்புச் சிகிச்சை மையம் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை, அத்தொகுதியின் திமுக எம்.பியான டாக்டர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பிரதம மந்திரி சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அவர் பெற முயல்கிறார்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் திமுக எம்.பி.,யான டாக்டர்.செந்தில்குமார் கூறியதாவது: ''சுகாதாரம் கட்டமைப்புகளில் பிராந்திய ஏற்றத்தாழ்வு சமன் செய்யப்பட வேண்டும். இந்த வகையில், மக்களுக்கு அதி உயர் சிகிச்சை எளிதில் அணுகக் கூடிய வகையில் மற்றும் மலிவு விலையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
இதற்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதி உயர் சிறப்புச் சிகிச்சை மையம் கட்டவேண்டிய அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன்.
அதி உயர் சிறப்பு மருத்துவமனை மையத்திற்குத் தேவையான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளேன். இது, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை, அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறை, சிறுநீரகவியல் துறை, வாஸ்குலர் அறுவை சிகிச்சை துறை போன்ற துறைகளுக்கானது.
எனது விரிவான அறிக்கையில் அத்துறைகளுக்கு தேவைப்படும் படுக்கை தேவைகள், மனிதவள தேவைகள், கட்டுமான தேவைகள் மற்றும் மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. இத்துறைகளுக்கு தேவையான படுக்கை தேவைகளின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 400 ஆகும். இவற்றை பிரதம மந்திரி சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செய்து தருமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டேன்.
இதன் திட்ட அறிக்கையுடனான கடிதத்தை இன்று பிரதம மந்திரி சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் அரசு இணைச் செயலாளர் நீலம்பு சரணிடம் கொடுத்துள்ளேன். இதே காரணத்திற்காக, கடந்த வருடம் அக்டோபர் 31 இல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்திருந்தேன்.
தருமபுரி மாவட்டத்திற்கு அதி உயர் சிறப்புச் சிகிச்சை மையம் கிடைத்தால் சுகாதாரம் பாதுகாப்பில் தருமபுரி மாவட்டத்திற்கு முக்கிய அரணாக விளங்கும் மற்றும் இதனால் வேலை வாய்ப்பும் உருவாகும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT