Published : 29 Sep 2016 12:01 PM
Last Updated : 29 Sep 2016 12:01 PM
கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் மனைவி யமுனா (30) தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "வியாழக்கிழமை காலை 5 மணியளவில் கழிவறைக்குச் சென்ற யமுனா வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் பதில் ஏதும் இல்லை. பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது யமுனா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது கையில் சாணி பவுடர் இருந்திருக்கிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டர். ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு உறவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மன உளைச்சல் காரணம்:
சசிகுமாரை யமுனா காதல் திருமணம் புரிந்துள்ளார். தற்போது 3 மாத காலம் கர்ப்பிணியாக இருக்கிறார். காதல் கணவரை இழந்த நிலையில் விரக்தியில் இருந்துவந்த அவர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக சசிகுமாரின் சகோதரி சூரிய குமாரி தெரிவித்தார்.
இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிக்குமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர். கடந்த 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் உள்ள இந்துத்வா நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் அவர் வீட்டிற்கு சுமார் அரை கி.மீ. தொலைவுள்ள நிலையில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பலியானார்.
சசிகுமார் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT