Published : 27 Jul 2022 07:47 PM
Last Updated : 27 Jul 2022 07:47 PM

“கவுன்சிலர்களை கொஞ்சமாவது மதியுங்கள்” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கடும் விவாதம்

மதுரை; ‘‘மழைக்கு சாலைகள் சேறும் சகதியுமாகிவிட்டன. தெருக்களில் சாக்கடை நீர் ஓடுகிறது. மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்’’ என்று மாநகராட்சி கூட்டத்தில் இன்று மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கொதிப்படைந்து பேசினர். மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. எம்எல்ஏ பூமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன், முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

5-வது மண்டலத் தலைவர் சுவிதா: சுகாதாரத்துறையில் வாகனங்கள், தூய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடக்கிறது. திருப்பரங்குன்றத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறர்கள். அவர்களுக்கான நீர் ஆதாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. அதனால், அவனியாபுரம், திருநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் திருப்பரங்குன்றத்தையும் இணைக்க வேண்டும்.

4- வது மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா: தெற்கு மண்டலம் முழுவதும் உள்ள வார்டுகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு சரியாக இல்லை. அரசு மருத்துவமனை பின்னால் உள்ள வார்டுகளில் உள்ள பாதாளசாக்கடையில் கழிவுகள் கிடக்கின்றன. மழை பெய்தால் அந்த கழிவு நீர் குடிநீருடன் கலக்கிறது. பொதுமக்களை சமாளிக்க முடியவில்லை. பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் காது குத்து, கல்யாண வீட்டிற்கு கூட போக முடியவில்லை.

திமுக கவுன்சிலர் அமுதா (2வது வார்டு): என்னுடைய வார்டு குடியிருப்புகளில் பாதாளசாக்கடை பொங்கி தெருக்களில் ஓடுகிறது. மழைக்கு சாலைகள் சேறும், சகதியுமாகிறது. மக்கள் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏஇ(AE)-க்களுக்கு போன் செய்தால் ஒன்று எடுப்பதில்லை அல்லது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்கள். கவுன்சிலர்களை கொஞ்சமாவது மதியுங்கள். நீங்கள் தினமும் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வேலை செய்கிறீர்கள். நாங்களோ, தெரு தெருவாக மக்களோடு நின்று சாக்கடை ஓடும் தெருக்களில் சுற்றுகிறோம். மேயர் வந்து பார்த்தால் 2 நாள் வேலை செய்கிறார்கள். பிறகு பழையப்படி பாதாளசாக்கடை கழிவுநீர் தெருவில்தான் ஓடுகிறது.

திமுக கவுன்சிலர் பேச்சால் அதிருப்தியடைந்த மேயர் அவரை, ‘‘உங்கள் கோரிக்கைகளை சொல்லிவிட்டீர்கள் அல்லவா அமருங்கள், செய்து தருகிறோம்,’’ என்றார். ஆனால், தொடர்ந்து அமுதா பேசி கொண்டே இருந்ததால் மாநகராட்சி பணியாளர்கள் அவரது ‘மைக்’கை ஆஃப் செய்துவிட்டனர். அதிருப்தியடைந்த மற்ற கவுன்சிலர்கள், கவுன்சிலர் அமுதாவுக்கு ஆதரவாக, ‘‘சொல்கிற வேலைதான் செய்து கொடுக்கவில்லை, கவுன்சிலர்களுடைய சபையில் பேசுவதற்கு கூட உரிமையில்லையா?’’ என்று குரல் எழுப்பினர். தொடர்ந்து அமுதா ‘மைக்’ ஆன் செய்யப்பட்டது. தொடர்ந்து அமுதா தனது வார்டு பிரச்சனைகளை பட்டியலிட்டார்.

அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா: தெருவிளக்கு பராமரிப்பு டெண்டர் எடுத்த கம்பெனியின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அதனை புதுப்பிக்காததால் மாநகராட்சி முழுவதும் தெருவிளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை. எதற்காக தெருவிளக்கு டெண்டரை புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்துள்ளீர்கள்? கழிவு நீரை உறிஞ்ச பயன்படுத்தும் சூப்பர் சக்கர் மிஷன்கள் வாங்காவிட்டால் ஒருபோதும் மாநகராட்சியில் வார்டுகளில் பாதாளசாக்கடை பிரச்சனையை தீர்க்க முடியாது. அதுபோல், சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தமிழக அரசு, அதிகாரிகள் ஒவ்வொரு வார்டிலும் நேரடியாக செய்தபிறகே அதற்கான சுய விண்ணப்பங்களை பொதுமக்களிடம் வழங்கி அதனை நிரப்பி கொடுக்க சொல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்யாமலே விண்ணப்பங்களை விநியோகம் செய்கின்றனர். அதனால், சொத்து வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

6 -வது வார்டு திமுக பால் செல்வி: என்னுடைய வார்டு மட்டமில்லாது 100 வார்டுகளிலும் நாய் தொல்லை அதிகரித்துவிட்டது. பள்ளி குழந்தைகள், முதியவர்கள் சாலையில் செல்ல முடியவில்லை. தெருவிளக்கு பராமரிப்பு படுமோசமாக உள்ளது. சாலைகளில், தெருக்களில் தெருவிளக்குகள் எரியாததால் வாகன திருட்டு, வாகன விபத்துகள் அதிகரித்துவிட்டது. வாகனங்களில் உள்ள பேட்டரி, பெட்ரோலை கூட திருடுகின்றனர்.

1-வது மண்டலத் தலைவர் வாசுகி: புறநகர் வார்டுகளில் முறையான மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. அதனால், மழைக்காலங்களில் வீடுகள் முன் தண்ணீர் தேங்கி, சாலைகள் சேறும், சகதியுமாகிவிடுகின்றன. பாதாளசாக்கடை முடிந்த இடங்களில் புதிய சாலைகளை தாமதம் செய்யாமல் போட வேண்டும். சாலை போடும் பணியை அதிகாரிகள் நின்று கவனிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் சாலைபோடும்போது வருவதில்லை.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாதீர்கள்: தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பேசுகையில், ‘‘மாநகராட்சி கீழ்நிலை அதிகாரிகள் திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி தந்துவிடவேண்டாம். பாதாளசாக்கடை பிரச்சனை தீர்க்கப்படாமல் நிரந்தரமாக உள்ளது. ஒரு பாதாளசாக்கடை தொட்டிக்கு அதற்கு அடுத்த தொட்டிக்கு இடையே பைப் லைன் இணைப்பு இல்லை. இதை கூட அதிகாரிகள் கண்டுபிடித்து அதற்கு இணைப்பு கொடுக்காமல் உள்ளனர். அதனால், பாதாளசாக்கடை கழிவு நீர் பொங்கி சாலைகளில் ஓடுகிறது. மழைகாலம் தொடங்கிவிட்டது. சாக்கடை பிரச்சனைக்கு மாநகராட்சி முதல் முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

எங்களை கண்டால் அச்சமா? சீண்டிய அதிமுக - அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா: கடந்த காலத்தில் எங்கள் ஆட்சியில் எதிர்கட்சிகளுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கினோம். அதை பின்பற்றி எங்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க பலமுறை சொல்லிவிட்டோம். ஆனால், இடம் ஒதுக்க மறுக்கிறீர்கள். எங்களை கண்டால் உங்களுக்கு அச்சமா? மண்டலத்திற்கு அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியுள்ளீர்கள். முதல் மண்டலத்திற்கு 36.19 லட்சமும், இரண்டாவது மண்டலத்திற்கு 26.71 லட்சமும், 4வது மண்டலத்திற்கு 21.15 லட்சமும், 5 வது மண்டலத்திற்கு ரூ.25.66 லட்சமும் ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால், உங்கள் மண்டலமான மத்திய மண்டலத்திற்கு மட்டும் ரூ.75.76 லட்சம் ஒதுக்கி உள்ளீர்கள். இது நியாயமா? அனைத்து மண்டலங்களுக்கும் பராபட்சமில்லாமல் நிதி ஒதுக்குங்கள்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x