Published : 27 Jul 2022 04:28 PM
Last Updated : 27 Jul 2022 04:28 PM
மதுரை: 'ஆண்கள் உடல் இச்சைக்கு அடிமையாவதால், பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது' என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2013ம் ஆண்டில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சல் போட்டதால் கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் மணிகண்டனை குலசேகரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் 2014-ல் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி அவர், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இறந்தவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளார் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது கூச்சலிட்ட பெண்ணை மனுதாரர் சிறிதும் இரக்கம் இல்லாமல் கொலை செய்துள்ளார். மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. அவர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதற்கு சாட்சியங்கள் உள்ளன. மனுதாரர் கொலை செய்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனுதாரருக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
பாலியல் குற்றங்கள் ஆண்கள் தனது உடல் இச்சைக்கு அடிமையாவதால் நிகழ்கின்றன. இதனால் பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது. இதனால் இந்த வழக்கில் மனுதாரர் மீது கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT