Published : 27 Jul 2022 12:50 PM
Last Updated : 27 Jul 2022 12:50 PM

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் 3 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் 3 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் உடன்படிக்கையின்கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் உடன்படிக்கையின்கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அதாவது, ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971 ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோளாகும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அடையாளப்படுத்துகிறது.

இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்கும் அதனை பேணுவதற்கும் இந்த அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இயற்கை ஈரநிலங்களை அறிவுசார் வகையில் பாதுகாப்பதற்கு இந்த அரசு ஈரநிலங்கள் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது. தற்போது கிடைத்துள்ள ராம்சர் அங்கீகாரம், இந்த அரசின் முயற்சிக்கு கிடைத்த பயனாகும். ராம்சர் அங்கீகாரம் என்பது தேசிய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பிற்கும், இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈரநிலங்களை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x